செய்திகள்

நுவரெலியாவில் 15 கையடக்க தொலைபேசியுடன் சந்தேக நபர் தலைமறைவு

அட்டன் பிரதான நகரத்தில் மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு நுவரெலியா பகுதியிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை  காலை குறித்த நபர் ஒருவர் இக்கடைக்கு வந்து கடையில் தொழில் புரியம் ஊழியரிடம் தான் நுவரெலியா வைத்தியசாலையில் தொழில் புரிவதாகவும் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு 15 கையடக்க தொலைபேசிகள் வேண்டும் என கோரி குறித்த கடையின் ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின் ஊழியரிடம் கலந்துரையாடி குறித்த 15 கையடக்க தொலைபேசிகளை மறுநாள் புதன்கிழமை காலையில் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரவும் என தெரிவித்து அவர் வெளியேறியுள்ளார்.

சம்மந்தப்பட்ட கடை ஊழியர் சந்தேக நபரின் வாக்குறுதியை நம்பி 15 கையடக்க தொலைபேசியுடன் கடந்த புதன்கிழமை அன்று நுவரெலியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபர் வைத்தியசாலைக்கு முன்பாக காத்துக்கொண்டு இருந்துள்ளார். அதன்பின் தொலைபேசியுடன் சென்ற கடை ஊழியர் சம்மந்தப்பட்ட சந்தேக நபருடன் கலந்துரையாடிய பின்னர் தொலைபேசி அனைத்தையும் சந்தேக நபர் பெற்றுக்கொண்டு தொலைபேசியை பெற்றுக்கொண்டதுக்கான ஒப்பந்த படிவத்தில் கையொப்பம் இட வேண்டும் இதனால் முத்திரைகளை பெற்று வருமாறு சந்தேக நபர் கடை ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த கடை ஊழியர் கடைக்கு சென்ற பின்னர் சந்தேக நபர் பெற்றுக்கொண்ட 15 கையடக்க தொலைபேசியுடன் அவ்விடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

சந்தேக நபரை தொலைபேசியுடன் தொடர்பு கொண்ட போது தான் வைத்தியசாலை காரியாலயத்தில் உள்ளே இருப்பதாகவும் தெரிவித்த அவர் சில நிமிடங்களில் அவரின் தொலைபேசியை அவர் நிறுத்தி வைத்ததாகவும் அதனையடுத்து வைத்தியசாலைக்கு சென்று இது தொடர்பாக வைத்தியர்களிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் இவ்வாறு தாங்கள் கையடக்க தொலைபேசி கேட்கவில்லையெனவும் இவ்வாறான ஒருவர் எமது வைத்தியசாலையில் தொழில் புரியவில்லையென வைத்தியர்கள் தெரிவித்ததாக கடை ஊழியர் எமக்கு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் செய்துள்ளதாகவும் 15 கையடக்க தொலைபேசிகளின் பெறுமதி 180000 ரூபா எனவும் கடை ஊழியர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2 1