செய்திகள்

நூற்றி ஐம்பது வருட காலமாக காணி உரிமை மறுக்கப்பட்டுள்ள மலையக சமூகம்

மனித இனத்தின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவது நிலம். விவசாயத்திற்காக, வீடு கட்டுவதற்காக மட்டுல்லாமல் மனிதரின் நாகரீகம், பண்பாடு ஆகியனவும் நிலத்தோடும் உயிரினங்களோடும், இயற்கையோடும் மிக நெறுக்கமாக பின்னிப் பிணைந்துள்ளது. தங்கள் தேவைகளுக்கான காணி இல்லாதவிடத்து மனிதகுலம் மிகவும் துண்பத்திற்குள்ளாகின்றது. காணி ஒரு அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. காணி உரிமையானது ஒருவருக்கு அக்காணியின் மேலும், அதன்கீழும், அதன்மேலான அண்டவெளிக்கும் உரித்துடையவர்  எனக் கூறப்பட்டுள்ளது.

முதலாம் இரண்டாம் உலக போர்கள் குடியேற்றத் திட்டங்கள்மீதும், பெரும் சக்தி படைத்தவர்கள் காணி மற்றும் வளங்களை கைபற்றிக் கொள்வதிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுததியதாக அமைந்தது. நீதியான முறையில் மக்களுக்கு காணி பகிர்வதற்கு சர்வதேச மட்டத்தில்; ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதிமுறை இல்லையென்றே கூறவேண்டும். சிறந்த பொருளாதாரத்தில் காணி, தொழிலாளர், முதலீடு, அமைப்புகள் என்பன உற்பத்திக் காரணிகளாக இருந்தாலும் காணி ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வளமாகவே இருந்து வருகிறது. நில உடைமை பங்கீடு ஒரு நாட்டின் அல்லது ஒரு பிராந்தியத்தின் பொருளாதாரம், அரசியல், சமூக, பண்பாடு ஆகியவற்றின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு சுட்டியாக உள்ளது. நவீன இலங்கையின் நில உடைமையாளர்கள் 1931ம் ஆண்டு அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தபின் அதிகாரதை கைபற்றினார்கள்.
நீர் பாசன சட்டம், வனப்பாதுகாப்பு சட்டம், நகர அபிவிருத்தி ஆணைக்குழுச் சட்டம், சுற்றுலா அபிவிருத்திச் சட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி ஆணைக்குழுச் சட்டம், பெருநகர சட்டம், காணி அபிவிருத்தி(திருத்தச்) சட்டம், மகாவெலி ஆணைக்குழு சட்டம், புகையிரத சட்டம், தொழில் அபிவிருத்திச் சட்டம், இலங்கை தேயிலைச் சபை, இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டம், விவசாய அபவிருத்தி ஆணைக்குழுச் சட்டம் போன்ற பல்வேறு சட்டப்பூர்வமான சரத்துகள்  நிறுவனங்;களின் கடப்பாடுகள் மீதான நிபந்தனைகளை விதித்திருந்தாலும்; 35க்கும் மேலான நிறுவனங்களின் நிலப் பயன்பாடு பாதிப்படைவதாகவேயுள்ளது

இலங்கையில் நிலம்தொடர்பான சட்டங்களும் வரையறைகளும் காணி அளப்பதும் ஆங்கிலேயர்; காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன் 3000ம் அடிக்கு மேல் ஒருவரும் வாழவில்லை. மிருக காடுகளாக காட்சியளித்தன. 1830ல் சர்வதேச  மட்டத்தில் அடிமைத் தொழிலாளர் நிலைமை ஒழிக்கப்பட்டது. இதன்  காரணமாக இத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த பணப்யிர் (cash crop) பாதிக்கப்பட்டது. இதற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்டதே பெருந்தோட்ட கட்டமைப்பு முறை. இந்த முறையின்  கீழ் எந்தெந்த நாட்டில் அந்நியர்கள் ஆட்சி செய்தார்களோ அந்தந்த நாட்டில் பணப்பயிர் செய்வதற்காக தேவப்பட்டது காணியும் தொழிலாளர்களும்;(land and labour) இவ்விரண்டையும் தம் கைவசம் வைத்திருக்கக்கூடிய பெருந்தோட்டத்துறை அமைப்பை உருவாக்கி இந்தியாவிலிருந்து 33 நாடுகளுக்கு தொழிலாளர்களை எடுத்துச் சென்றாhகள்.

•    ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட தரிசு நிலச்சட்டம்  இல.12 1840
•    வழிபாட்டுத்தளங்களின் காணி பதிவு சட்டம் இல.10இ1856
•    முடிக்குறிய காணிச் சட்டம் 1897

இச்சட்டங்களின் மூலமாக முடிக்குறிய காணிகள் பின்பு அரச காணிகளாக மாற்றப்பட்டு அரசுக்கு காணிகளை பாதுகாக்கும் உரிமை வழங்கப்பட்டதேயன்றி ஆளும் கட்சியினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் நினைத்தது போல் பகிர்ந்துக்கொடுப்பதற்கல்ல. இந்தக் காணி அரசுடமையாக்கப் பட்டதன் நோக்கம் காணி அற்றவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதற்கேயாகும். இதுதான் உண்மையான காணி பகிர்வாகும்.
1930ஆம் ஆண்டுக்கு முன் இந்தக் காணிகள் கூடுதலாக அரசிடமும், ஸ்டர்ரிங், ருப்பி கம்பெனிகளிடமும் தனியாரிடமும் (சிங்கள,தமிழ்,இஸ்லாமிய,மலையக) இருந்தது. 1930ஆம் ஆண்டிற்குப்பின் மேல் கூறப்பட்டவர்கள் ஸ்டர்லிங் கம்பெனியிடமிருந்தும் காணிகளை விலைக்கு வாங்கினர். அத்தோடு விஹாரைகளுக்கும் கோவில்களுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

காணிச் சட்டங்கள்
இலங்கையில் மொத்த நிலப்பரப்பு 13,226,230 ஏக்கர்களாகும். அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பு 13,147,630(83.3 வீதம்), தனியாருக்கும் ஆலயங்களுக்கும் சொந்தமான நிலப்பரப்பு 2,880,600 ஏக்கர்(17.7 வீதம்) ஆகும்.

அட்டவணை 01.
இலங்கையில் காணிஃஆள் விகிதாசாரம் (1830-2012)
காணி பரப்பளவு : 65,000 சதுர கிலோ மீட்டர் (6.5 மில்லியன் ஹெக்டயர்)

ஆண்டு

சனத்தொகை

காணி/ஆள் விகிதம்

1830 962,155 6.83
1901 3,565,964 1.84
1950 7,647,000 0.86
1981 15,012,610 0.44
2001 21,073,685 0.31
2012 20,263,723 0.31

2001ஆம் ஆணடு மதிப்பிடப்பட்ட சனத்தொகை 2012ஆம் ஆண்டு உண்மையான சனத்தொகையை விட அதிகமாக இருந்தது. ஆகவே காணி-ஆள் விகிதம் 0.31 விடவும் அதிகம். அதாவது ஒரு ஆளுக்கு 120 பர்ச். ஏறக்குறைய பெருந்தோட்டங்களில் வசிக்கும் 200,000 குடுமபங்களுக்கு இதில் ஒரு குடும்பத்தற்கு 40 பர்ச் மட்டும்தான் மலைக மக்கள் கேட்கிறார்கள

1930ஆம் ஆண்டுக்குப்பின் சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக விவசாய மக்கள் மத்தியில் காணியின் தேவை அதிகரித்தது. இதனால் பலர் காணி அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதற்காக அரசாங்கம் உலர் வலைய பகுதிகளில் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி காணிகளை பகிர்ந்தளித்தது. இத் திட்டத்தின் கீழ் காணி,நீர்பாசனம், சமூக நலத் திட்டங்கள், உட்கட்டமைப்புகள், குடியேற்றங்கள் என்பன 1935 ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி ஆணையின் கீழ் செயற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் 3-5 ஏக்கர்  நெற் காணியும், (பின்பு 2 ஏக்கர்களாக குறைக்கப்பட்டது) 1-2 ஏக்கர் மேட்டுக்காணியும் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்காக கொடுக்கப்பட்டது. அதிக சனத்தொகையைக் கொண்ட கிராமங்களில் காணியற்ற விவசாய மக்கள் இந்தக் குடியேற்றங்களில் குடியமர்த்துவற்காக தெரிவு செய்யப்பட்டனர். 1950ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் உள்ள வௌ;வேறு வருமானப்பிரிவுகளை உள்ளடக்கியதாக 106 கிராமங்களில் மேற்கொண்ட பொருளாதார ஆய்வில் 26 வீதமான விவசாய குடும்பங்கள் காணியற்றவர்களாகவும், 16 வீதமானவர்கள் அரை ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான காணியும்,  26 வீதமானவர்கள் அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் காணியும், 16 வீதமானவர்கள் 1-2 ஏக்கர் காணியும் கொண்டிருந்ததாகவும் தரவுகள் வெளிப்படுத்தியிருந்தன.

அட்டவணை-02: அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவு 1935 – 1985

இல.

திட்டம்

  ஏக்கர்

01 பாரிய குடியேற்றத் திட்டங்கள் 434,751
02 கிராம விரிவாக்கல் 882,737
03 மேட்டு நில குடியேற்றத் திட்டங்கள் 33,519
04 இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் 19,679
05 அத்துமீறிய குடியேற்றத் திட்டங்களை ஒழுங்குப்படுத்தல் 508,438
06 மத்திய வர்க்கத்தினருக்கான ஒதுக்கீடு 135,951
07 காணி கையளிப்பு (விசேட விதிமுறைகள்) 14,660
08 மழையை நம்பி பயிர் செய்யும் திட்டம் 13,252
மொத்தம் 2,052,987

ஆதாரம் : பொருளியல் நோக்கு தை 1990 பக்.31
1991ஆம் ஆண்டுவரை 2.9 மில்லியன் ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

காணி சீர்திருத்தச் சட்டம் 1972, 1975
இந்தச் சட்டங்களின் கீழ் பெருந்தோட்டத்துறை காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டது. அதில் ஒரு குடும்பத்திற்கு ஆகக்கூடியதாக 25 ஏக்கர் வயல்காணியும் 50 ஏக்கர் ஏனைய பயிர் செய்கைகளுக்கும் என வரையறைசெய்யப்பட்டது. 1977 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தபொழுது  18 வயதிற்கு மேற்பட்ட ஒருவருக்கு 50 ஏக்கர் காணி வைத்திருக்க முடியும் என மாற்றப்பட்டது. இதில் 3 வீதம்தான் வயலகாணி.
காணிவழங்குதல் (விசேட சரத்து) சட்டம் இல.34,1979,காணி பங்கீட்டு அளவு ஒரு ஏக்கராக மட்டுப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் குறை வருமானத்தைப் பெறுகின்ற காணியற்ற 21,027 குடும்பங்கள் காணிகளை பெற்றுக்கொண்டனர்.
காணி சீர்திருத்தச் சட்டம் (விசேட சரத்து) சட்டம் 39,1981, வர்த்தக நோக்கத்திற்காக வெளிநாட்டு கம்பெனிகளுக்கு காணிகள் வழங்கப்பட்டன. பெல்வத்த சர்க்கரை கூட்டுத்தாபனத்திற்கு 25,901 ஏக்கர் காணியும், மொனறாகலை சர்க்கரை ஆலைக்கு 12,500 ஏக்கர் காணியும் கொடுக்கப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கனிப்பீட்டின்படி 27 வீதமான விவசாய குடும்பங்கள் காணியற்றவர்களாக இருந்தனர். இன்று வட-கிழக்கு முகாம்களில் இருப்பவர்களும் மலையக மக்களும் காணியற்றவர்களாக இருக்கின்றனர்.

அட்டவணை-03: பகிர்ந்தளிக்கப்பட்டபின் அரசாங்க காணிகளின் நிலைமை-1988 (மி.ஹெ.)

காடுகள்

1.6

24%

காட்டு மிருகங்களுக்காக

0.7

11%

சேனைப் பயிர்செய்கைக்காக

1.0

15%

மேட்டுநில வருடாந்த பயிர்

0.1

  2%

புல்வெளி,புதர் பகுதிகள்

0.5

  8%

நீர் நிலைகள்,சதுப்புகள்

0.2

  4%

தேயிலை,இறப்பர்,தென்னை

1.0

15%

நெல்

0.8

12%

இதன்பிறகு 83 வீதமாக இருந்த அரச காணிகள் 48 வீதமாக குறைந்துள்ளது.

அட்டவணை 04: பெருந்தோட்டப்பகுதி

நிருவாகம்

தோட்டங்கள்

வீதம்

பரப்பு ஹெக்.

வீதம்

பரப்பு ஹெ. ஒரு அலகு

மொத்தம்

9291

100

540663

100

58

தனியார்-மொத்தம்

7349

 79

16864

 31

23

தனியார்-தனிநபர்

5469

 59

 91163

 17

17

தனியார்-கம்பெனி

1880

 20

 77482

 14

41

அரசு – மொத்தம்

1942

 21

372019

 69

192

அ.பெ.கூ.(SPC)

 646

  7

153712

 28

238

ம.தோ.அ.ச(JEDB)

 483

  5

127857

 24

265

கா.சீ.ஆ.(LRC)

 369

  4

20235

  4

 55

ஏனையவை

 444

  5

70215

 13

158

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கும் ஏனைய காரனங்களுக்காகவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 அட்டவணை: 05 – சிறிய காணிகள் -1998

வகை

எண்ணிக்கை

பரப்பு (ஹெக்டயர்)

வீதம்

பரப்பு ஹெ.1அலகு

வீட்டுத் தோட்டம்

133070

358829

25.3

0.3 (120 பர்ச்)

சொந்த மேட்டுநில காணிகள்

621180

542098

32.4

0.9 (360 ப.)

ஏனைய மேட்டுநில காணிகள்

155730

114878

 8.1

0.7 (280 ப.)

சொந்த    வயல் காணிகள்

534130

555089

25.0

0.7 (280 ப.)

ஏனைய வயல் காணிகள்

265150

129679

 9.2

0.5 (200 ப.)

அடையாளம் காணப்படாதவை

  5290

   711

  –

0.1 (20 ப.)

இரத்தின பூமி திட்டத்தின் கீழ் காணி வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனை திட்டத்தின் கீழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20பர்ச், நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 10பர்ச்,  மாநகர எல்லைக்ககுட்பட்ட பகுதிகளில் 6 பர்ச் வீதம் தனிநபர்களுக்கு காணிவழங்கலாம் எனவும் விவசாயத்திற்கு 2 ஏக்கர் மற்றும் தொழில் புரியும்; தனி நபர்களுக்கு 30 வருட குத்தகை அடிப்படையில் காணி வழங்கலாம் எனவும் கூறப்பட்டது. இது கூடுதலாக வட கிழக்கு பகுதிகளில் இருக்கிற பெரும்பான்மை மக்களுக்காக உருவாக்கப்பட்டது. 2006ம் ஆண்டு காணி அற்றவர்களுக்கு இனாமாக  காணி வழங்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டது. அட்டவணை 5 இன்படி ஒதுக்கப்பட்ட காணிகள் விவசாயத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் வீடமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட காணி மேல்கூறியுள்ளபடி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக மொனறாகலைப் பகுதியில் பிரதான பாதையில் 20 பர்ச் காணி பெரும்பான்மை மக்களுக்கு வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சிறுபான்மை மக்கள் உள்வாங்கப்படவில்லை. ஆகையால் இந்தத் திட்டத்தின் கீழ் தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 20பர்ச் காணி கொடுப்பதற்கு ஏன் பின்வாங்கப்பட வேண்டும்.

காணி சம்பந்தமான ஜனாதிபதி பணியகம் – 1989

இப்பணியகம் மறைந்த ஜனாதிபதி R.பிரேமதாசா அவர்களின் பணிப்பின் பேரில் 1989ம் ஆண்டு ஐப்பசி 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப் பணியகத்தின் பிரதான நோக்கங்களும் நடவடிக்கைகளும் பின்வருமாறு.
1.    பயிர் செய்கைகளுக்கும் ஏனைய முக்கிய தேவைகளுக்;கும் பயன்னடுத்தக்கூடிய அரச காணிகளை அடையாளம் காணுதலும் பகிர்ந்தளித்தலும்.
2.    பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாமல் இருக்கும் சகல தனியார் காணிகளையும் பயிர்ச்செய்கைக்காக காணியற்றவர்களுக்கு அளித்தல்.

இப்பணியகம் காணியற்றவர்களை மூன்று பிரிவினராக அடையாளம் கண்டுள்ளது.
1.    விவசாயக் குடும்பங்கள்
2.    தோட்டத் தொழிலாளர்
3.    அரசாங்கத் தொழிலாளர்கள்

மேற்குறித்தப் பிரிவினரிடையே பின்வரும் நோக்கங்களுக்காக காணிகள் பிரித்தளிக்கப்படும்.
1.    விவசாயம்
2.    குடியிருப்புத் தேவைகள்
3.    குடிசைக் கைத்தொழில

இப் பணியகத்தின் மொத்த இலக்கு 10 லட்சம் ஏக்கர் காணிளை இத் திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்ப்படுவதாகும். இதற்காக 550 நில அளவையாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஓவ்வொரு நில அளவையாளரும் மாத்திற்கு பகிர்ந்தளிக்ககூடிய 200 காணி அலகுகளை மாதாந்தம் அடையாளம் காணவேண்டும். இவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் காணிக் கச்சேரி நிறுவப்படும் இக் கச்சேரி நிலமற்றவர்களிடையே இருந்து விண்ணப்பங்களைக் கோரும். இவ்வாறு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு சுவர்ண பூமி திட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்படும். தற்போது மாகாண சபைகள் இத்திட்டத்தின் கீழான காணிப்பங்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்பணியகம் இதுவரை 7 லட்சம் ஏக்கர் காணிகள் பகிர்விற்கு தகுதியானவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 1994ம் ஆண்டு மார்ச் மாத இறுதிவரை 337,500 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்படடுள்ளன. 1994ம் ஆண்டு இறுதிக்குள் மேலதிகமாக 50,000 ஏக்கர் காணிகளை பகிர்ந்தளிக்கப்கடுவதே இப்பணியகத்தின் குறிக்கோளாகும். இதில் 5,000ம் ஏக்கர் குடியிருப்புத் தேவைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசக்காணிகள் கட்டளைச் சட்டத்தின்; கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்;கு 1994ம் ஆண்டு இறுதிக்குள் 120,000 சுவர்ணபூமி உறுதிகளை வழங்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அட்டவணை: 06   
காணி சம்பந்தமான ஜனாதிபதி பணியகம்.1994.31.12 வரையும் ஹெக்டயர்ஸ்.
– (நுவரெலியா மாவட்டம்)

வீடு

விவசாயம்
அரச காணி 38 368
காணி சீர்திருத்த குழு 10 282
கம்பெனி காணி 15  71
மொத்தம் 63 721

இந்த அட்டவணையின்படி நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக 784 ஹெக்டயர் காணிகள் வீடு கட்டுவதற்கும், விவசாயத்திற்கும், சிறுதோட்ட உரிமையாளருக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மலையக மக்கள் உள்வாங்கப்படவில்லை.

பெருந்தோட்டத்துறை

மலையக மக்களின் காணிக்கான போராட்டம் 1942ல் அரசாங்கம் 500 ஏக்கர்   காணியை கேகாலை மாவட்டம் புரத்கோபிட்டிய பகுதியில் கனவசம தோட்டத்தில் எடுத்தப்போது தோட்ட மக்களும் தங்களுக்கு காணி வேண்டும் என்ற போராட்டத்தில் இறங்கினார்கள்.
1977ம் ஆண்டு மலையகப் பகுதிகளில் 7,000ம் ஏக்கர் காணியை பறித்து நிலமற்ற சிங்கள கிராமங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக பலபோராட்டங்கள் மலையகத்தில் எழுந்தன. அவ்வாறு டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்கூட்டில் பலியான சிவணுஇலட்சுமனின் மரணம்(11.05.1977) விலைமதிப்பற்றது.
பெருந்தோட்டத்துறை காணி வழங்கும் செயற்பாடு 1956ல் ஆரம்பிக்கப்பட்டு  இதன்மூலம் பெரும்பான்மை இனத்தவர்கள் தோட்டங்களில் குடியேற்றப்பட்டனர். சிறு தேயிலை இறப்பர் பயிர்செய்கைக்காக காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக காணி சுவீகரிக்கப்பட்ட பொழுது வெளியேற்றப்பட்ட மலையக மக்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படவில்லை.(மகாவலி,விக்டோரியா). நட்சா திட்டத்தின் கீழும்  இவர்களின் இருப்பிடங்கள் அபகரிக்கப்பட்டன.

ஜனாதிபதியால் 1978 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நட்சா திட்டத்தின் மூலம் 26,000 ஏக்கர் 1,400 பெரும்பான்மை குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது. தனியார்  காணித்துண்டுகளை அளந்து காணி உறதிப்பத்திரம் வழங்குவதற்கு 1998 ஆம் ஆண்டு காணி உறுதி வழங்கும் ஆணை இல 21 இன் படி சிறிய திருத்தத்தோடு மக்களுக்கு காணிகள் பிரத்துக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான வேலைப்பாடுகள் 2014ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடைந்து அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அட்டவணை -07 காணிகளின் பரப்பளவு-பொருந்தோட்டக் கம்கெனிகள்,
அரச கூட்டுத்தாபனம் (ஹெக்டயர்)

வருடம்

2012

2011

2000

1990

1980

தேயிலை

82065

85440

97573

108244

129387

இறப்பர்

49398

48516

55971

60206

64819

தென்னை

10873

10915

11108

12185

1184

செம்பணை

7782

6615

காடு

23903

23737

ஏனைய பிரிவுகள்

5512

6454

மொத்தம்

179533

181677

164652

180635

205390

பெருந்தோட்டத்துறை (பிராந்திய பெருந்தோட்ட கம்பெனிகள், அரசகூட்டுத்தாபனம், 8 ஹெக்டயர் அல்லது 20 ஏக்;கருக்கும் மேற்பட்ட காணிகள்) காணிகளின் பரப்பளவு 1996ஆம் ஆண்டிலிருந்து 2004 வரை படிப்படியாக குறைந்துச் செல்கிறது. சராசரி வருடத்திற்கு 2,400 ஹெக்டயர் குறைக்கப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டிலிருந்து பெருந்தோட்டக் காணி(தேயிலை,இறப்பர்,தென்னை) 538,257 ஹெக்டயராக இருந்து 2002ஆம் ஆண்டு 384,842 ஆக கறைந்துள்ளது. அதாவது  30வீத காணி குறைக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு 175,533 ஆக குறைந்துள்ளது.2012ஆம் ஆண்டு இந்தப் பெருந்தோட்டத் துறையில் மட்டும் 3,375 ஹெக்டயர் காணிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிக் குறைப்புகளுக்கு பலவேறு காரணங்கள் உள்ளன. சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அதாவது 8 ஹெக்டயர் அல்லது 20 ஏக்கருக்கு குறைவான காணித்துண்டுகள். கிராம விரிவாக்கலுக்கும் ஏனைய காரணங்களுக்காகவும். ஆனால் இந்தக் காணி ஒன்றும் நிரந்தரமாக வசிக்கும் தோட்டத் தொழிலாளருக்கு கொடுக்கப்படவில்லை.

இன்று சிறு தோட்ட உரிமையாளர்களின் தொகையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காணிகளும் கூடிக்கொண்டு செல்வதையும் பெருந்தோட்ட காணிகள் குறைந்துக்கொண்டு போவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அட்டவணை :08- காணி பரப்பளவு (ஹெக்டயர்)

தேயிலை

இறப்பர்

வருடம்

சிறுதோட்ட உரிமையாளர்

பெ.தோ.கம் & அர.கூட்டுத்தாபனம்

சிறுதோட்ட உரிமையாளர்

பெ.தோ.கம் &அர.கூட்டுத்தாபனம்

2005

116492

95288

68109(59%)

47941(41%)

2011

120955

82065

2012

81863(63%)

48917(37%)

கண்டி மாவட்டம்

கண்டி மாவட்டத்தில் தெல்தோட்ட, கிரேட்வெளி, லிட்டில்வெளி, கலஹா டுனாலி, கித்;துள்முள்ள, லெவலின், அந்தனை, பார்கேபல, இம்புல்பிடிய தோட்டங்களில் வெளியாருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களில் 50 ஏக்கர்வரை கொடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 3,000 ஏக்கர் தரிசு நிலங்கள் காணப்படுகின்றன. இவை அளக்கப்பட்டு அரச அதிகாரிகளினால் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவை யாருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பது கேள்விக்குறி.
நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் பம்பரகளை, ஸ்கிராப், நேஸ்பி, லவர்சிலிப், மூன்பிலேன் ஆகிய 5 தோட்டங்கள் இருக்கின்றன. இதில் பம்பரகலை தோட்டத்தில் 38 ஏக்கரும் ஸ்கிராப் தோட்டத்தில் 4 ஏக்கர் காணியும் அரசாங்கம் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறியப்படுகிறது.

களுத்துறை மாவட்டம்

ஹொரணை பர்த் தோட்டத்தில் கைத்தொழில் பேட்டை அமைக்கும் முகமாக தேசிய முதலீட்டு சபை 1999ல் 1,600 ஏக்கர் காணியை பொறுப்பெடுத்துக் கொண்டது. இங்கு வாழ்ந்த 188 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 15 பேர்ச் காணி பகிர்ந்தளிக்கப்பட்டு வீடமைப்புத்திட்டத்தை ஏற்படுத்தியது. இதன்படி  தேசிய முதலீட்டுச் சபை 2006ம் ஆண்டில் குடும்பமொன்றிற்கு 660,000 ரூபாவை ஒதுக்கியிருந்தது. இந்த நிதியை பொறுப்பேற்ற குறிப்பிட்ட தொழிற்சங்கமொன்று பர்த் ஹவுஸிங் பீபிள்ஸ் லிமிடட் என்ற கம்பெனியை ஆரம்பித்து வங்கி கணக்கொன்றை ஏற்படுத்தி இந்த நிதியை வைப்பிளிட்டது. ஆனால் 2012 வரை எபின் பொரஸ்ட் பிரிவைச் சேர்ந்த 14 குடும்பங்களின் வீடுகள் நிறைவு செய்யப்படவில்லை.  இந்த தோட்டம் பொறுப்பேற்ற பின் தொழில் பேட்டை தொடங்கவில்லை. காடாக காட்சியளிக்கின்றது. பணத்தை தந்தால் வீட்டைக் கட்டிக்கொண்டு போவோம் என தொழிலாளர்கள் ; கூறுகின்றார்கள்.

அட்டவணை-09
2005-2014ஆம் ஆண்டு காலப்;பகுதியில் அரசு கையகப்படுத்திய காணிகளின் அளவு

இடம்

ஏக்கர்

முல்லிக்குளம்

  900

சம்பூர்

 5000

கந்தகாடு

11600

அம்பாந்தோட்டை

15000

நிஹதொல்ல

30000

சொரகுண

 3000

நில்கல

  500

வடக்கு(கிராம எழுச்சி)

16800

வெறலபட(கல்பிட்டி)

 2300

பாசிகுடா

  300

புத்தளம்கலப்பு

  250

கலப்பு

 1800

பாணமை, காடுகளை துப்புரவாக்கி நெற் பயிர் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சங்கமககண்டி தொடக்கம் பொத்துவில் நகர் வரையிலான 7 கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தில் பயிர் செய்ய முடியாது உள்ளது இராணுவம், காவல்துறை, வனபரிபாலன சபை ஆகியோர் இவ்வாறு தடுத்துவருகின்றனர். இந்தக் காணிகள் கூடுதலாக தனியாருக்குச் சொந்தமான காணிகள். ஆனால் 30 வருடமாக நடந்த யுத்தத்தின் காரணமாக இவை கைவிடப்பட்டதன் காரணமாக காடுகளாகியுள்ளது. இவற்றை சுத்தமாக்கி பயிர் செய்ய உரிமையாளர்கள் முயன்றபொழுது கடந்த அரசாங்கம் அது அரச காணி என்ற பொய்மையை உருவாக்கி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கி கொடுத்துள்ளதுடன் அபிவிருத்தி என்ற போர்வையில் உள்ளாச பிரயாண தேவைகளுக்கெனவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த10 வருட காலமாக பொருளாதார  அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பல தோட்டங்களில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வெளியாருக்கும், வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்சித் திட்டங்களுக்கென காணி சுவீகரிப்பு செய்தாலும் அது பற்றி எவ்வித அறிவித்தல்களும் அத்தோட்டங்களில் வாழ்ந்த மக்களுக்கும் அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுக்கும் கொடுக்கப்படவில்லை.

மலையக சமூகத்தின் வேண்டுகோள்

பிராந்திய தோட்ட கம்பெனிகளுக்கோ,பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திற்கோ பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கோ காணி உரிமை வழங்கும் அதிகாரம்  இல்லை. ஆனால் கடந்தக் காலங்களில்; 15 வருடங்களுக்குப் பின் சொந்தமாக்கப்படும் என்ற அடிப்படையில் கடன் பத்திரத்தில் தொழிலாளர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி கூடுதல் வட்டிக்கு கடன் கொடுத்ததன் மூலம் தொழிலாளர்களை கடன் சுமைக்குள் தள்ளியிரு;பதை இவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இனியும் இவர்களை நம்பி ஏமாறாமல் இதற்கு ஒரு இறுதியான முடிவை மக்கள் எடுக்க வேண்டும். காணியை அளக்கப்பட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்பெறக்கூடிய விதத்தில் உறுதிபத்திரம் அமைய வேண்டும். கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் 35 வருடம் பழமையான உறுதிப்பத்திரங்கள் மீதே கடன் வழங்கும் விதிமுறையை பின்பற்றுவதால் நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இவை எழுதப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கே காணிகளை சுவீகரிக்கவும் விடுவிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் இந்த அமைப்புக்கும் காணிகளை இலவசமாக கொடுப்பதற்கு அதிகாரமில்லை. இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதியால் மட்டுமே இதை இலவசமாக மக்களுக்கு கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது. எனவே ஜனாதிபதிதான் இவர்களுக்கு உறுதிப்பத்திரங்களையும் வழங்க வேண்டும். வீடுகட்டுவதற்காக அடிக்கல்நாட்டுவிழா முக்கியமல்ல. காணி உறுதிப்பத்திரமே பிரதானமான தேவையாகும். அதில் ஆகக் குறைந்தது 10 பர்ச் காணி வீடு கட்டுவதற்கும், 10 பர்ச் காணி வீட்டுத்தோட்டத்திற்கும் அதே நேரத்தில் மேலதிக வருமானத்திற்கான சுயதொழில் செய்வதற்காக மேலும் 20 பர்ச் காணியும் வழங்கப்பட வேண்டும். காணி அளந்துக்  கொடுத்தப்பிறகு 550-750 ச.அடி பரப்பளவு வீடுகளைக் கட்டுவதற்கு கம்பெனி 30 வீதமும் பயனாளிகள் 30 வீதமும் அரசாங்கம் 40 வீதமுமமாக பங்களிக்கவேண்டும். பயனாளிகளின் பங்களிப்பை அவர்களது சேமலாப நிதியிலிருந்து மீளப்பெற வேண்டும்.

துணைநூல் பட்டியல்
•    Statistical Information ofn Plantation crops -2011,2012-Ministry of Plantation Industries
•    Land & Land Use in Sri Lanka- Logos ,Volume 29No.3&4
•    Economic Review – January 1990
•    மாற்றம் காணும் மலையக சமூகம் – 2014, அருட் தந்தை ச.கீத பொன்கலன்
•    மலையக தொழிலாளர் வீடு காணி சொந்தம், யூலை 1994 – அருட் தந்தை ச.கீத பொன்கலன்