நெஞ்சே எழு 15 – கடன்பட்டார் நெஞ்சம்…
க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )
இன்று நமது தேசத்தில் இருந்து, பிறக்கும் குழந்தைகள் வரை கடனாளிகளாகவே இருக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளமைக்கு காரண காரியங்களை தொடர்ந்தும் ஆராய்ந்துகொண்டிருக்காமல் இதிலிருந்து மீள்வது எப்படி என்ற “புரட்சி” நாட்டில் ஏற்பட்டாலே எமது நாடு முன்னேற்றப்பாதையில் செல்கின்றது என்று சொல்வதில் உண்மை இருக்கும் என்றால் அது மிகையாகாது.
அண்மைக்காலமாக கடன் நிமித்தமான தற்கொலைகள், கொலைகள் என்ற செய்திகள் நெஞ்சங்களை பதறவைத்துக்கொண்டிருக்கின்றன. அவசரத்தில் அல்லது நம்பிக்கையில் வாங்கும் கடன்கள், அல்லது இன்னொரு இடத்தில் இருந்து வாங்கி வேறொருவருக்கு கொடுக்கும் கடன்கள் வளர்ந்துகொண்டே சென்று கழுத்தை நெரிக்கும் அளவுக்கு பூதாகரமாகி நிற்கின்றன. மறுபுறம், வங்கிக்கடன், நுண்கடன்கள், வாகன குத்தகைக் கடன்கள், அடைவுக் கடன்கள், கடன் அட்டைக் கடன்கள் என்று இன்று பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பதே உண்மை.
ஆரம்ப காலங்களை எடுத்துக்கொண்டால் முக்கியமாக தமது பிள்ளைகளின் படிப்பிற்காகவும், அவர்களின் திருமணங்களுக்காகவும், வெளிநாடு செல்வதற்காகவும், அல்லது ஒரு வீடு கட்டும்போது என தனிப்பட்ட நபர்களிடமிருந்து கடன்களை பெற்றிருந்தனர். ஆனால் உலகமயமாதல் என்ற இன்றைய நிலையில், என்ன என்ற காரணங்கள் இன்றியே கடன்கள் பெறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கு இப்போதைய சந்ததியினரிடமிருக்கும் மனப்பாங்கும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. மற்றவர்கள் மத்தியில் நாமும் குறிப்பிட்ட ஆடம்பரமாக வாழவேண்டும், மற்றவர்களுடனான ஒப்பீடுகள், முக்கியமாக வெளிநாட்டுக்குச்செல்லவேண்டும் என்ற இளம் சந்ததியினரின் மோகம், ஆடம்பர பிரியங்கள், பாடசாலைப்பருவங்களிலேரயே தாரளமாக பணத்துடன் புழங்க பெற்றவர்கள் அனுமதிப்பது என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதை எல்லாம் விலக்கி இந்த கடன்களில் இருந்தெல்லாம் விலகவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என பல நிபுணர்கள் விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.
முதலில் எல்லாமாக உங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது என்பதை பார்த்துக்கொள்ளவேண்டும். கடனிலே மூழ்கி இருக்கும்போது பணத்தை சேர்க்க எங்கே வாய்ப்பு என நீங்கள் கேட்கலாம்! முதற்கட்டமாக கடன்களை எப்படி அடைப்பது என்பது பற்றி திட்டமிட்டு செயல்பட தொடங்கவேண்டும். நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் தாராளமாக ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதும் மிகச்சிறந்த ஒரு வழிமுறைகளாகும்.
உலகில் நீங்கள் பார்த்து வியக்கும் பெரும் கோடிஸ்வரர்கள் எல்லாம் ஆரம்ப காலங்களில் பெரிய அளவில் கடன் வாங்கியவர்கள்தான். ஆனால் அவர்கள தமது கடன்களை அடைக்க புதிய புதிய யுத்திகளை கையாண்டனர். புதிய முயற்சிகளில் ஈடுபட்டவாகள், திட்டமிட்டு செயற்பட்டபோது, கட்டுப்பாடாக பணத்தை கையாண்டு கடன்களை அடைத்து பெரும் பணத்தினை சம்பாதித்துக்கொண்டனர்.
கடன்வாங்குவது பெரும் தவறுதான் யாரும் அதை இல்லை என மறுக்கப்போவதில்லை எனினும் கடன் வாங்கியதை ஒரு தீராத சுமையாக நினைத்து தலையில் கைவைத்துக்கொண்டு புலம்புவதால் அடையப்போவது எதுவும் இல்லை.
கடன் வாங்கியது உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பெரும் தோல்வி என நினைத்துக்கொள்ளவேண்டும். அதே தோல்வியை விரைவாக திருத்திக்கொண்டு எமக்கு தேவையான பணத்தினை நாமே உழைத்துக்கொள்ளமுடியும் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.
கடன் பட்டவர்கள் முக்கியமான விடயத்தினை மறந்து விடாதீர்கள்.. கடன் என்பது மிகப்பெரும் இருட்டு, அந்த இருட்டு மனநிலையில் இருந்து கடன்பட்டவர்களால் பொஸிட்டிவ்வான சிந்தனைகளை கொண்டுவருவது மிக கடினம். எனவே அந்த மனநிலையில் இருந்து தள்ளி வந்து சிந்திக்கும் ஆற்றல்கள் தேவைப்படுகின்றது. நிற்சயமான தீர்மானமான வருமானம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னதாகவே கடனை பெற்று அதை அடைத்துவிடுபவர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறானவர்களுக்கானதே வங்கிக்கடன், கடன் அட்டை, நுண்நிதிகள் போன்றவை, அவற்றைவிடுத்து வருமானத்தை பெருக்கிக்கொள்ளவதை விடுத்து குறுகிய தேவை ஒன்றுக்காக தூரநோக்கம் இல்லாமல் செயற்பட்டு கடன் படுபவர்களாலேயே பாரிய இன்னல்கள் முகம்கொடுக்கப்படுகின்றது.
சமஜோசித புத்தி உள்ளவர்கள் கடன் அட்டைகளை பயன்படுத்துவதை கவனித்துப்பார்ப்பீர்களேயானால், அவசர மருத்துவ தேவை ஒன்று தேவைப்படலாம் என்ற நோக்கத்திற்காகவும், மற்றும் சலுகைகள் தமது அட்டைக்கு கிடைக்கும் வேளைகளிலும் மட்டுமே அந்த அட்டைகளை பயன்படுத்தி அந்த அட்டைப்பாவனையால் இலாபம் அடைபவர்களாகவே இருப்பார்கள். அதைவிடுத்து அட்டை கையில் இருக்கின்றது என்பதற்காக கண்டதையும் வாங்கிவிட்டு கடன் அட்டைக்குரிய பணத்தை கட்டமுடியாமல் நீதிமன்னறம்வரை செல்வர்கள் அல்லர்.
கத்திக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல வங்கி மற்றும் நிதிநிறுவனங்களின் கடன் வழங்கும் பிரிவுகளும் இருந்துகொள்ளும் இது யதார்த்தமானதுதான். ஏன் என்றால் வங்கிகளோ நிதி நிறுவனங்களோ தொண்டாற்ற நிறுவப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் இலாபநோக்கத்திற்காக செயற்படுபவர்களே ஆவர். பெரும்பாலும் அவர்கள் வழங்கும் நிதி சுயதொழில் ஊக்கிவிப்புக்காகவும், தொழில் முன்னேற்றத்திற்கானது என்ற வகையிலேயே வழங்கப்படுகின்றது. அந்த நிதிகளை பெற்று தாம் வாங்கிய கடன்களை இலாபங்களை கொண்டு அடைத்து முதலை பெருக்கிக்கொள்பவர்கள் இங்கு இல்லாமல் இல்லை. மறுபுறத்தே கடன் வழங்குகின்றார்கள் என்ற அடிப்படையில் கடனை பெற்றுவிட்டு எந்தவொரு தொழிலும் இல்லாமல் வாங்கிய கடனை கட்ட அல்லல் படுபவர்கள் மறுபுறத்தே உள்ளனர். தனிப்பர்களிடம் பெறும் வட்டிகளை விட மத்தியவங்கியால் அங்கிகரிப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் வட்டிவிகிதம் மிகக்குறைவானது என்பதை மறுக்கமுடியாது.
கடன்களுக்கான தற்கொலைகள் இன்றைய நாளில் மிக அதிகமாக சென்றுகொண்டிருக்கின்றன…
வாழ்க்கைமீது அதி உச்ச வெறுப்பு நிலை உருவாகும்போது அங்கு நெகட்டிவ் எண்ணங்கள் மட்டுமே மனம் முழுவதும் நிரம்பிக்கிடக்கும். விளைவாக இனிமேலும் பொறுப்பதற்கில்லை என்ற சுய பச்சோதாபம் ஏற்பட்டு தற்கொலை என்கின்ற தைரியமான முடிவை மனம் எடுக்கின்றது.
‘பிறப்பினாலும், உடல் அங்கவீனங்களாலும், வாழ்க்கை முழுவதும் தாங்கிக்கொள்ளமுடியாத சோகங்களுடனும் வாழ்க்கையினை முகம் கொடுத்து வாழ்ந்து சாதனையாளர்களாக பிரகாசிக்கும் இரட்சகர்களும் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தற்கொலை செய்யும் எண்ணமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த முற்றுப்புள்ளிகள், வாழ்வின் ஊக்கங்கள்’
தற்கொலைகளை தடுப்பதற்கான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கவுன்சலிங் மையம் அவசரமாகத்தேவை.
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களை மீட்டெடுப்பதற்காக, உலகம் முழுவதும் பல நாடுகளில் பல்வேறு அமைப்புக்கள் செய்றபட்டுவருகின்றன.
அமெரிக்கா போன்ற முதலாம் உலக நாடுகளில் கூட, அதிலும் நன்றாக படித்தவர்கள் வாழும் மாநிலங்களில் தற்கொலையின் அளவு அதிகரித்துச்செல்லும் காரணங்களால் அந்த நாடுகளில் மிக இலகுவாக அடைந்துகொள்ளக்கூடிய வகையிலும், முகம்காட்டாமலே தொடர்புகொண்டு தமது ஏக்கங்களை சொல்லக்கூடிய வகையிலும் பல கவுன்சலிங் மையங்கள் இயங்கிவருகின்றன. இவற்றின் தரமான சேவைகளால் மிக அதிகமான வீதத்தில் தற்கொலை முயற்சிகளில் வீழ்ச்சி காணப்படுவது நிரூபிக்கப்படும் உண்மை. மனம் விட்டுப்பேசலாம், மனதில் உள்ளவைகள் அத்தனையினையும் கொண்டலாம்,
கடன் தொல்லை, காதல்தோல்வி, குடும்பநிலை, துரோகம், வறுமை, நோய், நம்பிக்கை இன்மை போன்ற தற்கொலைக்கான காரணங்களையும் அவற்றை எதிர்ப்பதற்கான தைரியங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருக்கும்போது, தம் வார்த்தைகளையும் காதுகொடுத்துக்கேட்க இன்னொருவர் இருக்கின்றார் என்ற நினைவு ஒவ்வொருவர் மனதுக்கும் இதமானதாகவே இருக்கும்.
இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்பது உறுதி செய்யப்படுமானால், பலர் மனம் திறந்து பேச எத்தனிப்பார்கள். மனம் விட்டு பேசினாலே பாதிச்சுமை நீங்கிவிடும். சுமை குறைய குறைய நெகட்டிவ் எண்ணங்கள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துவிடும்.
உலகின் இன்னொரு மனிதன் இருக்கும் வரை, யாரும் அநாதைகள் கிடையாது’. இந்த பொஸிட்டிவ் சிந்தனைகளின் அடிநாதத்திலேயே உலகலாவிய கவுன்சலிங் மையங்கள் இயங்கிவருகின்றன.
முதலில் உங்கள் கடன்களை அடைத்து முடிந்தபின்னர் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கான பாதுகாப்புக்கான பணத்தினை ஒதுக்கிக்கொள்ளுங்கள். பிள்ளைகளின் கல்விக்கு ஒரு பகுதி பணத்தினை கண்டிப்பாக ஒதுக்குங்கள். அதேபோல எதிர்பாராத மருத்துவ செலவுக்கு என ஒரு பகுதி பணத்தினை எப்போதும் தயாராக வைத்திருங்கள். எப்படி தேவையில்லாத செலவுகளை தவிர்த்துக்கொள்வது என்பதை நிதானமாகச்சிந்தியுங்கள். அவற்றை இனங்கண்டு அந்த செலவுகளை குறைத்தால் பணத்தட்டுப்பாடு மெல்ல மெல்ல நீ;குவதை கண்ணூடாக காண்பீர்கள். கௌரவ, ஆடம்பரச்செலவுகளை ஒரேயடியாக இல்லாது செய்யுங்கள்.
கடன் என்பது தோல்வியின் அடையாளம்! என்றாலும் அதையே ஒரு சவாலாக ஏற்று கடனை அடைக்க விறுவிறுப்பாக முயல்வது நல்ல பலனைத்தரும்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தோல்வி அடையாமல், வெற்றியினை காணமுடியாது. நாம் செய்யும் தவறுகளை திருத்தி அமைக்கும்போது வெற்றியினை அடையமுடியும். ஆனால் ஒரு தடவை செய்த தவறை திரும்பத்திரும்ப செய்யக்கூடாது என்பதை நன்றாக நினைவில் வைத்திருங்கள். கடனில்லா பெருவாழ்வு வாழ திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
இறுதியாக சில வார்தைகள்.. கடன் மனநிலை தோன்றும்போது அதை தள்ளிப்போட்டு இருப்பதைக்கொண்டு சமாளிக்கப் பழகிக்கொள்ளுங்கள். விரலுக்கு ஏற்காத அளவுக்கு உங்கள் குடும்பத்தார் ஆசைப்படும்போது இயல்பாக சில விடங்களை சுட்டிக்காட்டுங்கள், கௌரவங்களுக்கு முதல் இடம் வழங்குங்கள். குடும்பத்தில் கணவனும் மனைவியும் பண விடயத்தின் உருவருக்கொருவர் உண்மையாக இருக்க பழகிக்கொள்ளுங்கள், உங்கள் வருமானத்திற்கு ஏற்றவகையில் வாழ்க்கையை திட்டமிடுங்கள். வாழ்க்கை தரம் உயரவேண்டும் எனில் உங்கள் உழைப்பே உயரவேண்டுமே தவிர கடன் அல்ல என்பதை தாரக மந்திரமாகவே வைத்திருங்கள். குடும்ப வருமானத்தையும், மாதாந்த செலவுகளையும் பட்டியலிடுங்கள், எழுத்தில் கொண்டுவாருங்கள்.. நாளைய பொழுதுக்காக சேமித்துப்பழகுங்கள், குடும்பத்தின் பாதுகாப்பில் அக்கறையாக இருந்துகொள்ளுங்கள். உண்மையான சேமிப்பும், உண்மையான காப்புறுதியும் உங்கள் குடும்பத்தை எப்போதும் கைவிடுவதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழ் மொழி கண்ட புலவர்களில் கம்பர் எத்துனை விற்பன்னர் கற்பனா சக்தியும், உவமான உவமேய திரட்சிகளும் மிக்கவர் என்பது யாவருக்கும் தெரிந்த ஒருவிடயம். அந்த கம்பரே சாதாரண ஒரு மானிடனால், யாராலும் ஜெயிக்கமுடியாத சக்கரவர்த்தி எனப் புகழ்பெற்ற இராவணன் தோற்கடிக்கபட்டு, “இன்று போய் போர்க்கு நாளை வா! “என்று கூறி அனுப்பட்ட வேதனையினை ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று வர்ணிக்கின்றார் என்றால் கடன் படுவதை பற்றி இதைவிட எதுவும் சொல்லத்தேவை இல்லை.
கடனில்லா பெருவாழ்வு பெற்றிடுவீர்…
முன்னைய பதிவுகள்
நெஞ்சே எழு 13 – வள்ளுவன் என்ற வளவாளர்
நெஞ்சே எழு 12 – ஆணின் வெற்றிகளின் பின்னால்..
நெஞ்சே எழு 12 – ஆணின் வெற்றிகளின் பின்னால்..
நெஞ்சே எழு 11 – தவறவிடும் தவறுகள்
நெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க!
நெஞ்சே எழு 9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்
நெஞ்சே எழு 8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்
நெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…
நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..
நெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..
நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்
நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்