நெஞ்சே எழு 8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்
க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )
பீனிக்ஸ் பறவை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம். ஆனால் ஜப்பானிய தேசத்தில் வாழும் மக்களை பார்த்தவர்கள், பீனிக்ஸ் பறவைகளின் மறு விம்பங்களாக அவர்களை கூறிக்கொள்வார்கள்.
அந்த அளவுக்கு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னதாக சாம்பல் மேட்டிலிருந்து பூத்த மலர்களாக அவர்கள் பூத்துக்குலுங்குவதற்கான காரணங்களை இன்று உலகம் தொடர்ந்தும் ஆய்வுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கின்றது.
ஜப்பானியர்களின் மனப்பாங்கு அந்த மாபெரும் யுத்தத்திற்கு பின்னதாக பரினமித்தது என்பது ஒரு பக்கம் இருக்க, இன்ன பிற காரணங்களும் அத்தகைய முன்னேற்றங்களுக்கு வலுச்சேர்த்தன என்பதே யதார்த்தம். முக்கியமாக அவர்களிடம் அதிகமாக இருந்த பேச்சு வல்லமையும் திறமையும் ( Negotiation power and skill ) அவர்களது பிரமாண்ட வளர்ச்சிக் காரணம் என சுட்டிக்காட்டுகின்றனர் ஆய்வாளர்கள்.
‘சிறப்பு மேலும் மேலும் சிறப்பு’ என்ற தமது ஹெய்சன் கோட்பாட்டுக்கு அமைவாக அவர்கள் தமது பேச்சுவார்த்தைகளின் தரத்தையும் அந்த அளவுக்கு மெருகேற்றிக்கொண்டுள்ளனர். இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்து அணுகுண்டு தாக்குதல்களுக்கும் பல நாடுகளின் கண்டனத்திற்கும் உள்ளாகி, அதேவேளை பெரும் தோல்வியுடன் சரணடைவு என்ற எல்லைவரை சென்ற அத்தேசம், தனக்குள்ளே தனது ஒட்டுமொத்த மனப்பாங்கையே மாற்றிக்கொண்டு தேச முன்னேற்றத்தில் வெற்றி அடைந்தது யாவருக்கும் ஒரு ஆச்சரியம் மட்டுமல்ல ஒரு பாடமும் கூட.
அந்த வகையில் அவர்களின் வெற்றிகளின் பின்னணியில் பேச்சுவார்த்தைகளின் சக்தி பெரும் பங்கு வகித்தது என்பது மிகையாகாது. முக்கியமாக தமது முன்னேற்றத்திற்கான ஆரம்ப காலங்களில் அவர்கள், எங்கெல்லாம் திறமைகளும் அதி நுட்பமான விடங்களும் உள்ளனவோ! அங்கேயெல்லாம் தொடர்பினை ஏற்படுத்தி தமது சக்திவாய்ந்த பேச்சு மற்றும் பேச்சுத்திறமைகளால் இவ்வாறான பல்வேறு தேசங்களுக்கும் தமது நாட்டின் குழுக்களை அனுப்பி எல்லா இடங்களிலும் எதையும் அஜாக்கிரதையாக விட்டுவிடாமல் கற்றுக்கொண்டார்கள். இறுக்கமாக தமது தொழிநுட்பங்களை பூட்டி வைத்திருந்த மேற்கு ஜேர்மனியின் தொழில் நிறுவனங்களிடமே.. தமது சலிக்காத தொடர் பேச்சுவார்த்தைகளின் மூலம் சில வித்தைகளை கற்றுக்கொண்டனர். முதலில் பல தடவைகள் எந்த வெளி நாட்டிற்கும் தமது நுட்பங்கள் பற்றி கலந்துரையாடல்கள் இருக்காது என்று முகத்தில் அறைந்ததுபோல ஜேர்மனிய நிறுவனங்கள் அறிவித்தாலும் கூட, மீண்டும் மீண்டும் தமது மென்மையான அதேநேரம் சலிக்காத பேச்சுவார்தை திறமைகளால் அவர்களையே தம்மைநோக்கி புன்முறுவல் வரச்செய்தார்கள் ஜப்பானியர்கள்.
‘சராசரியாக ஓரு மனிதன் பிறந்து இரண்டு வருடங்களுக்குள் பேசத்தொடங்குகின்றான். ஆனால் இறக்கும்வரை எப்படி பேசுவது என்பதை மட்டும் அவன் கற்றுக்கொள்வதில்லை’ என்று ஒரு பிரபலமான பேச்சு உண்டு. ஓரளவுக்கு அது உண்மையும் கூட. தமிழில்கூட பேசும் முறை பற்றிக்கூறும்போது இடம் பொருள் ஏவல் என்பவற்றை கருத்தில் கொண்டு பேசவேண்டும் என்ற பதமும் உண்டு. பொதுவாக ஒரு மனிதன் தனது வெற்றிப்பாதையில் பல மனங்களை வெல்பவனாக இருக்கவேண்டும்.
பல மனங்களை வெல்லவேண்டும் என்றால் அவனது பேச்சுத்திறன் மிக முக்கியமானதொன்றாக இருக்கவேண்டும். எந்த பலம் பொருந்தியவர்களும் நான் பேச்சுக்களுக்கு கொடுக்கும் நேரத்தை செயலில் செலவிடவே விரும்புவேன் என எழுந்தமானமாக சொல்லிவிட முடியாது. தனது செயல்களை முறையாக பூர்த்தி செய்ய பேச்சுக்கள் மிக அவசியமானவை. பேச்சுக்களே ஒருவரைப்பற்றி மற்றவர்களுக்கான புரிதல்களை உண்டாக்கின்றன.
மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் அவர். அவருக்கு நடக்கும்போதுகூட வேலை செய்துகொண்டே நடக்கவேண்டிய சூழ்நிலை. அவரை நெருங்கவே அவரது நிறுவன நிர்வாகிகள் முதல், சில போட்டிக் கம்பனிகளின் தலைவர்களே பயப்படுவார்கள். அவருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க முயற்சி செய்கின்றான் ஒரு ஆயுள் காப்புறுதி ஆலோசகன். அவர் தனது பிரதான அலுவலகத்திற்கு தனது வாகனத்தில் வந்து லிப்டில் ஏறவதற்கு செல்லும் இடைப்பட்ட தூரத்தில் அவரது கண் பார்வை படும்படியாக தொடர்ந்து ஒரு வாரமாக வந்து நின்றான். ஆரம்பத்தில் காவலாளர்கள் அவனைத் தடுத்தபோது சமயோசிதமாக பேசி அவர்களிடமும் நட்பை பெற்றிருந்தான். ஓரு வாரமாகவே இவனை கவனித்த அந்த செல்வந்தரின் பிதான காரியதரிசி ஒருநாள் செல்வந்தர் லிப்டில் சென்றதும் இவனை அணுகி நீண்டநாளாக நீ இந்த இடத்தில் நிற்பதை அவதானித்திருக்கின்றேன். எதற்காக நீ இங்கே நிற்கின்றாய்? என வினவுகின்றார். அதற்கு அவன், தான் யார் என்பதையும், தான் இங்கு நிற்பதற்கான காரணத்தையும் விளக்கிக்கூறுகின்றார். எல்லாவற்றையும் கேட்ட காரியதரிசி நக்கலாக சிரித்துக்கொண்டே ‘முடவன் தேன் கொம்புக்கு ஆசைப்பட்டதுபோன்றது உன் எண்ணம்’, இதற்காகத்தான் நீ இவ்வளவு நாளும் நின்றாய் என்று தெரிவித்திருந்தால் எப்போதே இது முடியாத காரியம் என்று உன்னை அப்புறப்படுத்தியிருப்பேன் என்றார். அவரிடம் விளக்கமாகவும், அதேவேளை தன்னம்பிக்கையுடனும் சுவாரகசியமாகவும் பேசுகின்றான் இந்த ஆலோசோகன். அவனது தன்னம்பிக்கையை பார்த்து உள்ளே மகிழ்ந்தாலும் முகத்தை இறுக்கமாக வைத்துதுக்கொண்டே ‘இனிமேல் உன்னை இந்த இடத்தில்கண்டால் உன்மேல் கடுமையாக நடந்துகொள்ள நான் முயற்சி செய்வேன்’!! என எச்சரித்துவிட்டு சென்றுவிடுகின்றார் காரியதரிசி.
மறுநாள் அந்த செல்வந்தருடன் வாகனத்தில் வந்திறங்குகின்றார் காரியதரிசி. வுழமைபோலவே சிரித்துக்கொண்டே நிற்கின்றான் ஆலோசகன். கோபம் தலைக்குமேலே வர காரியதரிசி இவனை நோக்கி சென்று கடுமையாக ஏசி அவனை உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர சொல்கின்றார்.
அதேவேளை இவனை கனநாட்களாக கவனித்த செல்வந்தர். அவன் ஏன் வந்தான் என்று காரியதரிசியை அழைத்துக்கேட்கின்றார். காரியதரிசி சொன்னதை கேட்டுவிட்டு. சரி.. அவனை என்னிடம் அழைத்துவாருங்கள் என்கின்றார்.
செல்வந்தரை இறுதியில் சந்தித்தேவிட்டான் காப்புறுதி ஆலோசகனான இளைஞன். செல்வந்தரும் உன்னை நான் நெடுநாட்களாக பார்த்துவருகின்றேன். சுரி.. நீ வந்த விடயத்தை சொல்… ஆனால் ஒன்று உனக்கான நேரம் 02 நிமிடங்கள் மட்டுமே என்னால் தரமுடியும், மற்றயது காப்புறுதிக்கான தேவை எனக்கு இல்லை. ஏராளமான சொத்துக்கள் எனக்கு உண்டு. நான் இல்லாது போனாலும் எனது மனைவியும் குழந்தைகளும் எந்த ஒரு குறைகளும் இருக்கப்போவதில்லை இப்போது நீ உன் விடயத்தை சொல் என்கின்றார்.
சேர்… எனது தகப்பன் பெயர் இது என ஒருவரின் பெயரை சொல்கின்றான் இளைஞன். செல்வந்தரின் இமைகள் உயர்கின்றது. அவன் தொடர்ந்தும், எனது தந்தை அளவில்லாத சொத்துக்களையும், செல்வங்களையும் தேடியிருந்தார் நான் பிறக்கும்போதே.. பின்னர் வர்த்தக ரீதியிலான நட்டங்களால் எங்களை பற்றி யோசிக்காமல் தற்கொலை செய்துகொண்டார். நானும் எனது தாயும் நடுத்தெருவில் நின்றோம் சில காலங்களாக, எனது தாய்தான் ஒரு நிறுவனத்தில் சிறிய ஒரு ஊழியராக வேலை செய்து என்னை வளர்த்தார். எனது 9 ஆவது வயதில் என் தாயையும் இழந்து அநாதை இல்லம் ஒன்றில் சேர்ந்து என் கல்வியை தொடர்ந்து உயர்தரம் வரை படித்து இன்று இந்த காப்புறுதி தொழிலை செய்தவண்ணமே என் பட்டப்படிப்பையும் படித்துவருகின்றேன். என்றான்..
செல்வந்தரின் கண்கள் சிறிது பனிப்பதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
இரண்டு நிமிடங்களில் செல்வந்தர், சரி.. எனக்கு எவ்வளவு காப்புறுதித்தொகை தரமுடியுமோ அவ்வளவு தொகையினையும் போட்டுக்கொள், அதற்கான பணத்தினை எனது கணக்காளரிடம் பெற்றுக்கொள் இப்போது நான் எங்கே கையொப்பங்களை இடவேண்டும் என்பதை மட்டும் சொல் என்கின்றார். பாரிய ஒரு தொகையினை கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவரிடம் கையொப்பத்தை பெற்றுக்கொண்ட அவன்.. மீண்டும் செல்வந்தரை பார்த்து.. ஐயா..!! தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், எனது தாயும் தந்தையும் எந்தக்குறையும் இல்லாமல் இருக்கின்றார்கள். நான் உங்களிடம் சொன்ன கதை பொய்யாக இருக்கலாம். அந்த கதையினை கேட்டு உங்கள் கண்கள் ஈரமானதையும், அதனாலேயே இந்த காப்புறுதியை நீங்கள் தருவதையும் நான் நன்கு அறிவேன்.
ஆனால் நாளை உங்கள் மகன் இதேபோல உண்மையான கதையினை வேறு ஒருவரிடம் கூறமால், என்றும் நிதித் ஸ்திரத்துடன் இருக்கவே அப்படியொரு கதையினை உங்களிடம் சொன்னேன் என்றான். எழுந்து நின்று கைதட்டினார் செல்வந்தர்.
உண்மையிலேயே ஆயுள் காப்புறுதி விற்பனை என்பதே பேச்சுவார்த்தை சக்தியிலேயே உள்ளது. மரணம், இயலாமை, பாரிய நோய்கள், மருத்துவங்கள் என்ற எதிர்மறை (நெகட்டிவ்) விடயங்களை கொண்டதாகவே அது உள்ளது. இவற்றை எல்லாம் கொண்டே வாடிக்கையாளர்களை கவரவேண்டிய பொறுப்பே ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கு இருக்கின்றது எனவே அவர்கள் தமது உரையாடல்கள், மற்றும் பேச்சுவார்த்தைகளின் சக்தி கொண்டே தமக்கான வியாபாரங்களை பெற்றுக்கொள்கின்றனர்.
இதுபோலவே பாரிய யுத்தங்களாக வெடித்து, சொல்லொனா துயரங்களை கொடுக்கக்கூடிய பல யுத்தங்களை தரமான பேச்சுவார்த்தைகளால் சில நாடுகள் இல்லாமல் செய்துள்ளன. அதேதபோல நாடுகளுக்கிடையலான எல்லைப்பிரச்சினைகள், நதிப்பிரச்சினைகள், என்பவற்றையும் சில நாடுகள், மற்றும் பிரதேசங்கள் தமது பேச்சுவார்த்தை சக்தியாலும், ஆக்கபூர்வமான பேச்சுக்களாலும் வென்றுகாட்டியுள்ள வரலாறுகளும் உண்டு.
ஏன் தனி மனிதர்களிடம் பேசும்போதுகூட தரமான பேச்சு வல்லமை மிக்கவர்களே, செல்லும் இடங்களெல்லாம் மக்களின் மனங்களை வெல்கின்றனர்.
வியாபார ரீதியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள், மேற்கொள்பவர்கள், உங்கள் பேச்சுவார்தைகளுக்கான திறனை வளர்த்துக்கொள்வற்கான இந்த விடயங்களை கடைப்பிடிக்க தொடங்கி பாருங்கள் வெற்றிக்கான பாதைகள் உங்களுக்கு இலகுவாக தெரிய ஆரம்பிக்கும்.
01.பேரம்பேசும் திறனை விருத்தி செய்யுங்கள்
02.பேச்சுக்களுக்கான செயன்முறைகளை கொண்டிருங்கள்
03. உற்சாகத்தை மெருகூட்டுங்கள்
04. கரிசனையுடன் எதிர்த்தரப்பாளர் சொல்வதை கேளுங்கள்
05.சிறந்த கேள்விகளைக் கேளுங்கள்
06.மிடுக்காக நேர்த்தியுடன் பேசுங்கள்
07.எதிர்த்தரப்பினர் ஏற்றுக்கொள்ளும் வெளிப்பாடுகள்! பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்ளும் இடம் என்பவற்றில் எச்சரிக்கையாக இருத்தல்
08.பல தேர்வுகளை கூறி சலுகைகள் அனைத்தையும் ஒருக்கே கூறுங்கள்
09.சிறந்த முறையில் ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். ஒப்பந்தத்தை செயற்படுத்தும் திட்டம் பற்றி சிறப்பான வடிவமைப்பை உருவாக்குங்கள்
09.பல தேர்வுகளை கூறி சலுகைகள் அனைத்தையும் ஒருங்கே கூறுங்கள்
10.சிறந்த முறையில் ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். ஒப்பந்தத்தை செயற்படுத்தும் திட்டம் பற்றி சிறப்பான வடிவமைப்பை உருவாக்குங்கள்
முன்னைய பதிவுகள்
நெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…
நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..
நெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..
நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்
நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்