செய்திகள்

நெருக்கடியிலும் இறுதி போட்டிக்கு முன்னேறிய வெஸ்ட்இண்டீஸ் 5 போட்டிகளிலும் டாஸ் வென்ற ஆச்சரியம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசிடம் போராடி வீழ்ந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கோலி 89 ரன்களுடனும் (47 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), டோனி 15 ரன்களுடனும் (9 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் நமது வீரர்கள் 59 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ‘சிக்சர் புயல்’ கிறிஸ் கெய்ல் 5 ரன்னிலும், சாமுவேல்ஸ் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சிமோன்ஸ் 82 ரன்களுடனும் (51 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ரஸ்செல் 43 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர். சிமோன்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த் வெற்றி குறித்து வெஸ்டிண்டீஸ் அணிகேப்டன் டேரன் சமி கூறியதாவது:-

டாசில் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் நான் வேண்டுதல் வைத்திருந்தேன். ஐந்து போட்டிகளிலும் நானே டாஸ் வென்றது எனக்கே ஆச்சரியம்தான். நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தியா வந்தோம். 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் உலக சாம்பியன் ஆகியுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டிலும் எங்கள் அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதையெல்லாம் உத்வேகமாக கொண்டுதான் ஆடி வென்றோம். வெஸ்ட் இண்டீஸ் அணி என்பது இப்படிப்பட்டதுதான். கிறிஸ் கெயில் நிறைய நெருக்கடிக்கு நடுவே ஆட வேண்டியுள்ளதால் சறுக்குவதாக விமர்சனங்கள் கூறப்படுகிறது. ஆனால் எங்கள் அணியில் கிறிஸ் கெயில் மட்டுமல்ல, 15 பேரும் மேட்ச் வின்னர்கள்தான். இவ்வாறு சமி தெரிவித்தார்.