செய்திகள்

நேபாளத்திலிருந்து 35 இலங்கையர் மீட்பு: விமான மூலம் கொண்டுவரப்பட்டனர்

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கம் காரணமாக அச்சமடைந்த 35 இலங்கையர்கள் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று நாடு திரும்பினர்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு முப்படை வீரர்கள் மீட்புப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பிலிருந்து நேபாளம் சென்று மீண்டும் நாடு திரும்பிய விமானம் மூலமே 35 இலங்கையர்களும் அழைத்து வரப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்து நாடு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக கூறப்படும் 35 இலங்கையர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுக் காலை இடபெற்ற விசேட செய்தியாளர் மாநாட் டில் விளக்கமளித்த விமானப் படையினர் பேச்சாளர் மேலும் விபரிக்கையில்,

மீட்புப் பணிப்பாளர்கள் மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பிலிருந்து விமானப் படைக்குச் சொந்தமான சி – 130 ரக விமானம் நேற்றுக் காலை நேபாளம் சென்றடைந்தது. இந்நிலையில், அச்சம் காரணமாக நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள 35 இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்ததால் அவர்களை அழைத்துச் செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே நேற்று மீண்டும் நாடு திரும்பிய விமானத்தில் இலங்கையர்களை அழைத்து வர உரிய நடவடிக்கைகளை விமானப் படையினர் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

நேபாளத்தில் வாழும் இலங்கையர்களின் நலனை கருத்திற்கொண்டே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை விமானப் படையினர் இந்த சேவையை வழங்கியதாக தெரிவித்த அவர், அங்குள்ள இலங்கையர்கள் மேலும் இவ்வாறு வரவிரும்பும் பட்சத்தில் அங்குள்ள இலங்கை தூதரகத்தை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு அடுத்து சென்று வரும் விமானங்கள் ஊடாக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க உரிய சேவை வழங்க விமானப் படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.