செய்திகள்

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 3,000 ஐயும் தாண்டியது

நேபாளத்தை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தின் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேபாளத்தை கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் நேற்று முன் தினம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் 7.9 ஆக பதிவாகி இருந்தது. அதன்பின் மீண்டும் மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டது. நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம் உலுக்கியது.

இதில் பல்லாயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், கோயில்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும், வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன.

இந்த நிலநடுக்கத்தில், 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தாராஹரா கோபுரம் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. அந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 10 வருடங்களாக இந்த கோபுரத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள், கோபுரத்தின் எட்டாவது மாடியில் நின்று காத்மாண்டு நகரின் அழகை ரசித்து கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அவர்களில் பலரும் பலியாக நேரிட்டது. இதுவரை 200 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சடலங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காத்மாண்டுவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல மருத்துவமனைகளில் இடவசதி இல்லாததால், திறந்த வெளியிலும், தற்காலிக கூடாரங்கள் அமைத்தும் மருத்துவ குழுவினர் போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுவரை இந்த கோர நிலநடுக்கத்திற்கு 3,000 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேபாள அரசு +97714200258, +97714200105, +97714200203 என்ற உதவி எண்களையும், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரத்தில் +977 9851107021, +977 9851135141 என்ற எண்களும், 24 மணி நேர உதவி மைய எண்களாக +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 என்ற எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.