செய்திகள்

நேபாள பூகம்ப எதிரொலி! 80 சென்ரி மீற்றர் உயர்ந்த காத்மண்டு பள்ளத்தாக்கு

நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் புராதன சின்னங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 7,652 பேர் பலியாகினர். 16,390 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மீட்பு பணி முடிந்து 4 நாட்களுக்கு பிறகு நேபாள சர்வே துறை சேத விவரங்கள் குறித்த ஆய்வு நடந்தியது. அதில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 234 வீடுகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாயின. 2 ஆயிரத்து 37 ஆயிரத்து 68 வீடுகள் பாதி அளவில் சேதமடைந்துள்ளன.

பூகம்பம் பாதித்த பகுதியில் 50 சதவீத வீடுகள் மட்டுமே குடியிருக்கத்தக்க நிலையில் உள்ளன. 20.25 சதவீத வீடுகள் குடியிருக்க முடியாத அளவில் சிதைந்துள்ளன.

அதே நேரத்தில் பூகம்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட காத்மண்டு பள்ளத்தாக்கு தற்போது முன்பை விட 80 செ.மீட்டர் அளவு உயர்ந்துள்ளது. பூகம்பத்துக்கு முன்பு இப்பள்ளத்தாக்கு கடல் மட்டத்தில் இருந்து 1,338 மீட்டர் உயரத்தில் இருந்தது. தற்போது அது 1338.8 மீட்டர் செ.மீட்டர் ஆக உள்ளது.

இந்த தகவலை நேபாள சர்வே துறை இயக்குனர் மதுசூதன் அட்கிகரி தெரிவித்துள்ளார். ஆனால் உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதா? அல்லது அதிகரித்துள்ளதா? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.