செய்திகள்

நேபாள மக்களுக்கு மாட்டுக்கறி அனுப்பிய பாகிஸ்தான்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு மாட்டுக் கறி பொட்டலங்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி இமய மலை அடிவாரத்தில் உள்ள நேபாள நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.9 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலபேர் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தியா, சீனா உட்பட பல நாடுகள் நேபாளத்துக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றன. இந்த வகையில், பாகிஸ்தானும் நிவாரண உதவிகள் செய்துள்ளது. அதில் உடனடியாக உண்ணக்கூடிய வகையிலான மாட்டுக்கறியையும் அனுப்பி உள்ளது.

பெரும்பான்மை இந்து மக்கள் வாழும் நாடாக அறியப்படும் நேபாளத்தில், மாடுகளை புனிதமாகக் கருதுகின்றனர். பசுவை கொல்வதற்கு பொதுவான தடையும் அங்கு உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான், நேபாள நாட்டு மக்களுக்கு மாட்டுக்கறியை அனுப்பியுள்ளது நேபாள மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. நேபாளத்திற்கு பாகிஸ்தான் மாட்டுக்கறியை விஷமத்தனமாக அனுப்பி உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மருத்துவ உதவியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் இது பற்றி கூறுகையில்,
”பாகிஸ்தானிடம் இருந்து வந்துள்ள நிவாரணப்பொருட்களை பெறுவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்கு சென்றோம். அப்போது உடனடியாக உண்ணக்கூடிய உணவு பொட்டலங்கள் இருந்தன.அவற்றில் மாட்டுக்கறி உணவும் இருந்தது. பெரும்பாலான நேபாள மக்கள் இது பற்றி அறியாமல் இருந்தனர். பிறகு மாட்டுக்கறி இருப்பதை தெரிந்து கொண்ட பின்னர் அவர்கள் உண்ண மறுத்து விட்டனர்” என்றார்.

மேலும், நேபாளத்தின் மத நம்பிக்கைகளை பாகிஸ்தான் காயப்படுத்துகிறது என்றும், இது அதிர்ச்சியாக இருப்பதாகவும் நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளாமல் பாகிஸ்தான் இவ்வாறு செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் விளக்கம்

இதனிடையே இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், நேபாளத்தில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்களுக்காகவே அந்த மாட்டுக்கறி உணவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த உணவு பாக்கெட்டின் மேலேயே இது தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இந்நிலையில் இந்த விவகாரம் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா மற்றும் உளவுத் துறை தலைவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ள உள்மட்ட அளவிலான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி உண்மை என தெரியவந்தால், பாகிஸ்தானிடம் தூதரக அளவில் இப்பிரச்னை கொண்டு செல்லப்படும். மேலும் எங்களது முக்கிய கூட்டாளியான இந்தியாவிடமும் இதுகுறித்த தகவல்களை தெரிவிப்போம் என நேபாள வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

pakstan beef