செய்திகள்

நேர்காணல்

1. வலிவடக்கிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை எவ்வாறான நிலையில் உள்ளது?
இடம் பெயர்ந்த காலந்தொடக்கம் பல அவஸ்தைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இடம்பெயர்ந்து தனியார் வீடுகளிலும், தனியார் காணிகளிலும் இருப்பதனால் காணியுரிமையாளர்கள் சிறிது காலத்தில் எழுப்புவதனால் பல வீடுகள், காணிகளில் மாறி மாறி இருந்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த 25 வருடங்களில் 20 மேற்பட்ட வீடுகளில் மாறியிருக்கின்றார்கள். இதே போன்று முகாம்களில் உள்ள காணிகளும் தனியாருக்கு சொந்தமான காணிகளாக இருப்பதனால் காணியுரிமையாளர்கள் முகாம்மக்களை எழுப்புவதற்காக அடிக்கடி மக்களுடன் பிரச்சனைபடுகிறார்கள். சில இடங்களில் அடிதடி கூட ஏற்பட்டு பொலிஸ்நிலையம் வரை பிரச்சனை சென்றிருக்கிறது. இவ்விடயத்தில் பிரதேச செயலகங்கள் கூட அக்கறையின்மையாக இருந்து வருகிறார்கள்.

2. வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான (முகாம்களில் உள்ளவர்கள்) உதவிகள் திருப்திகரமான முறையில் வழங்கப்படுகின்றனவா?
முகாம்களில் உள்ள மக்களுக்கு தற்பொழுது எந்த விதமான உதவிகளும் வழங்கப்படுவதில்லை ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரணங்களும் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன. 25 வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட தற்காலிக கொட்டில்களில் தான் இப்பவும் வாழ்ந்து வருகிறார்கள். இக்கொட்டில்களில் கூரைகள் பிய்ந்து விட்டன. சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. ஆனால் இன்று வரை மாற்று கூரைகளோ அல்லது சுவர் அமைப்பதற்கான உதவிகளோ வழங்கப்படவில்லை.

3. வடக்கு மாகாண சபையால் இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகின்றதா?
இல்லை வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகி இருக்கின்றது முதலமைச்சரால் இடம் பெயர்ந்த மக்கள் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் யானை பசிக்கு எள்ளு பொரி போல தான் இருக்கிறது. முகாம்களை பொறுத்தவரையில் அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் மிகவும் வறுமைநிலையில் இருப்பதனால் எல்லோருக்கும் உதவி வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

4. நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது தொடர்கிறதா?
ஆம் வலிவடக்கில்;;; உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 6500 ஏக்கர் நிலம் ஏற்கனவே அபகரிக்கப்பட்ட நிலையில் தற்போது வலி வடக்கில், கீரிமலை, சேந்தான் குளம் (சேச்சுக்கு சொந்தமான காணி) பகுதிகளிலும் மற்றும் மாதகல், திருவடி நிலை, காரைநகர் ஊர்காவற்றுறை வடமராட்சி கிழக்கில் உடுத்துறை, தாழையடி போன்ற பிரசேதங்களில் கடற்படை தேவைக்காக அபகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

5. இராணுவம் தனது தேவைக்கென ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஏதாவது சொல்ல முடியுமா?
இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு வலிவடக்கில்; உள்ள 6500 ஏக்கர் நிலப்பரப்பு தனியாருக்கு சொந்தமான காணிகள் அதற்கான ஆதாரங்களாக உறுதிகள் உள்ளன. இப் பிரதேசத்தில் 75 மேற்பட்ட இந்து கோயில்கள,; 12 கிறிஸ்தவ தேவாலயங்கள், கசநோய் வைத்தியசாலை, வலிவடக்கு பிரதேசசபை தலைமை அலுவலகம் போன்றன இருந்தன அவைகள் அனைத்தும் இடித்து தரமட்டம் ஆக்கப்பட்டதுடன் இடிபாடுகள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கிறது. தற்போது இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளம் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.

6. தற்பொழுது வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் என்ன நிலைமைகள் உள்ளது?
இராணுவ பாதுகாப்பு என்ற போர்வையில் அபகரிக்கப்பட்ட இப்பகுதியில் இராணுவத்தால் தல்செவென என்ற உல்லாசவிடுதி நடத்துகிறார்கள், கோல்ப்மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. யோகட் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது, இராணுவம் விவசாயம் செய்கிறார்கள். இராணுவ குடும்பங்களுக்கு குடியிருப்பு அமைக்கப்பட்டிருகிறது. தல்செவன உல்லாச விடுதிக்கு வெளியார் யாவரும் சென்று தங்கக்கூடியதாக இருக்கிறது. எனவே இப்பிரதேசம் இராணுவ ஆடம்பரதேவைக்காக கடல்வளமும,;;; நிலவளமும் உள்ள இப்பிரதேசம் தமிழ்மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஆகவே வலிவடக்கிலும் இன அழிப்பு தடை பெற்று கொண்டிருக்கிறது.

7. வலிவடக்கில் இடம் பெயர்ந்த மக்களின் புள்ளி விபரங்கள் மாற்றறப்படுவதாக தெரிவிக்கப்படுவது பற்றிய உண்மை நிலை என்ன?
வலிவடக்கிலிருந்து இடம் பெயர்ந்த முகாம்கள் 34 உள்ளன. இவைகள் தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், உடுவில், கோப்பாய் கரவெட்டி, பருத்தித்துறை ஆகிய இடங்களிலுள்ள பிரதேச செயலகங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் மீள்குடியேற்றத்திற்காக 9948 குடும்பங்கள் தங்கள் காணி உறுதிகளை காட்டி பதிவுகளை மேற்கொண்டும் உள்ளனர். (இந்தியாவில் அகதியாக உள்ளவர்கள் இவ் எண்ணிக்கையில் உள்வாங்கப்படவில்லை) அரசாங்க அதிபர் வரும் வெளிநாட்டு தூதுவர்கள,; வெளிநாட்டு பிரதி நிதிகளிடம் எண்ணிக்கை குறைத்து 5200 குடும்பங்கள் என்பதை தெரிவித்து வருகிறார் இச் செயற்பாடானது இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு துணை போவதாக அமைகிறது. இவருடைய இச்செயற்பாட்டிற்கு எங்களுடைய எதிர்பை தெரிவித்திருக்கிறோம்.