யாழில் நேற்று கைதானவர்கள் நீதிமன்றில் ஆஜர் : பாதுகாப்பு அதிகரிப்பு (படங்கள்)
யாழ்.நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 127 பேர் வரை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தற்போது அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் யாழ்.நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 26 பேரும் யாழ்.நகரில் ரயர் எரிக்க முற்பட்டதாக ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே சந்தேகநபர்கள் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நேற்று யாழ்.நீதிமன்ற வளாகம் மற்றும் யாழ்.நகரப் பகுதிகளில் ஈடுபட்ட வன்முறைகளை அடுத்து பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் நீதிமன்றச் சூழலிலும் யாழ்.நகரப் பகுதிகளிலும் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக யாழ்.நகரப் பகுதிகளில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது.
யாழ்.நகர் நிருபர்-