செய்திகள்

நைஜீரியாவில் பொக்கோ கராம் தற்கொலை தாக்குதலில் 30 பேர் பலி

நைஜீரியாவின் மைதுகுரி நகரில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், 2 பெண் தற்கொலை படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவின் மைதுகுரி நகரில் இரு வேறு இடங்களில் தற்கொலைப்படைத்தாக்குதல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட இருவரும் போகோஹராம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்களாக இருக்கலாம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் தற்கொலைத் தாக்குதல் பாகா சாலை, மீன் சந்தை அருகே உள்ள மசூதியில் நடந்தது. புனித ரமலான் மாதத்தையொட்டி பிரார்த்தனை செய்ய வந்த பல அப்பாவி பொதுமக்கள் இந்த தாக்குதலில் பலியாகினர். அதற்கு ஐந்து நிமிடம் கழித்து, சற்று தொலைவில் இரண்டாவது குண்டு வெடித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.