செய்திகள்

நைஜீரியாவில் பொக்கோ ஹராம் தாக்குதலில் 2000 அதிகமான பொதுமக்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு பகுதி கிராமங்களில் பொக்கோ ஹராம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி 2000 ற்கும் அதிகமானவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டு கொன்றிருக்கிறார்கள்.

ட்ரக் வண்டிகளில் கிராமங்களுக்குள் நுழைந்த அவர்கள் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிபிரயோகம் செய்ததுடன், ஓடி ஒளிந்த பொதுமக்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்று சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. வீடுகளுக்குள் ஒழிந்த மக்களை அவர்கள் வீடுகளுடன் சேர்த்து உயிருடன் எரித்துக் கொன்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் சடலங்கள் சிதறிக் காணப்படுவதாகவும் அவர்களின் மரண சடங்குகளை செய்வதற்கு கூட பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்ல அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவளை, நைஜீரியாவில் பொக்கோ ஹராமின் அட்டூழியத்தை அடக்குவதற்கு மேற்கு நாடுகள் அசட்டை காட்டி வருவதாக நைஜீரியாவின் முக்கிய பேராயர் கைகாம குற்றம் சுமத்தியிருக்கிறார். பிரித்தானியாவின் த இண்டிபெண்டன்ட் பத்திரிகைக்கு அவர் கருத்து தெரிவித்தபோது பிரான்சில் கடந்த வாரம் 17 பேர் கொல்லப்பட்டபோது மேற்குநாடுகள் நடந்து கொண்ட விதத்திற்கும் நைஜீரியாவில் பொக்கொ ஹராம் விடயத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக அவர் கூறினார்.

Soldiers walking in the street in Baga, Nigeria in 2013 Nigeria Violence