செய்திகள்

நைஜீரியாவில் பொதுமக்களை தாக்கி கொன்ற பெண் தீவிரவாதிகள்

நைஜீரியாவில் போஹோகாரம் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். போர்னோ மாகாண தலைநகர் மைதுகுரி அருகே உள்ள ஷபர்மாரி என்ற கிராமத்துக்குள் பெண் தற்கொலை படை தீவிரவாதிகள் புகுந்தனர்.

அவர்களை பார்த்ததும் பயந்து போன பொதுமக்கள் குடும்பத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை வழிமறித்த தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர்.அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார். இத்தாக்குதலில் 6 பெண் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் முடிந்த பிறகு அங்கு வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். போர்னோ மாகாணத்தில் இதுபோன்ற தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.