செய்திகள்

‘நோ பயர் ஸோன்’ சிங்கள மொழியாக்கத்தை மைத்திரியிடம் கொடுக்க கெலும் முயற்சி

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு அதன் தயாரிப்பாளரான கெலும் மெக்ரே முயன்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை.

யுத்த சூன்ய வலயம் (நோ பயர் சோன்) ஆவணப்பட தயாரிப்பாளரான செனல்-4 திரைப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேவே அந்த ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கு முயற்சித்தார்.

பிரட்டன் பிரதமர் டேவிட் கெமருனை சந்தித்த பின்னர் தனது வாகனத்தில் ஏறுவதற்கு ஜனாதிபதி முயன்றபோதே கெலும் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கணக்கிலெடுக்காமல் சிரித்துகொண்டே காரில் ஏறிவிட்டார்.

அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வழங்குவதற்கு முயன்றார். அமைச்சர் மங்கள சமரவீர, கெலும் மெக்ரேயிடம் ஏதோ கூறிவிட்டு காரில் ஏறிவிட்டார்.

இதனையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர், கெலும் மெக்ரேயை அங்கிருந்து செல்லுமாறு பணிக்கவே அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.