செய்திகள்

பகிரங்கப்படுத்தப்படாத சந்திப்பாகவே லண்டன் சந்திப்பு இருந்திருக்கவேண்டும்: லண்டனில் சுமந்திரன்

லண்டனில் கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வரும் அரசியல் கூட்டம் ஒரு பகிரங்கப்படுத்தப்படாத சந்திப்பாகவே இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ . சுமந்திரன், ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்திருந்தபடி இந்த சந்திப்பு அதிகார பகிர்வு தொடர்பாகவோ அன்றி போர்க்குற்ற விசாரணை தொடர்பானானதாகவோ இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டனில் நடைபெற்றுவரும் சந்திப்பு தொடர்பாக தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள சுமந்திரன், இந்த சந்திப்பு வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடி பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியும் அதற்கான கால அட்டவணை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் ஆராயும் சந்திப்பாக மட்டுமே அமைவதாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் பிரதிநிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதாக சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதிநிதி , நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், சுவிஸர்லாந்தின் வெளிநாட்டமைச்சை சேர்ந்த மார்டின் டெசிஞ்சர் , தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் நோர்வே ஈழத் தமிழர் அவை மற்றும் உலகத் தழிழர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர் டாக்டர் ரமணன் ஆகியோர் உட்பட வேறு சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக சமகளம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதேவளை, லண்டனில் நடைபெற்றுவரும் சந்திப்பு வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பானது மட்டுமே என்று இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ள உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கூறியதுடன், ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடைபற்ற சந்திப்பு இலங்கையின் அரசியல் யாப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியதாகவே இருந்ததாகவும் அந்த சந்திப்பில் பல சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெறும் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டிருப்பதை சுரேன் சுரேந்திரன் உறுதி செய்தார்.

சில ராஜதந்திர நடவடிக்கைகளை செய்யும்போது அவற்றை வெளிப்படையாக கூறுவது சாணக்கியம் அல்ல என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.