செய்திகள்

பங்களாதேசில் மோடிக்கு பெரும் வரவேற்ப்பு

பங்களாதேசுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடியின் விமானம் இன்று காலை வங்கதேசம் தலைநகர் டாக்காவை அடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார்.

பின்னர் அரசு முறைப்படி வழங்கப்பட்ட ராணுவ வீரர்களின் அணி வகுப்பு மரியாதையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

வங்கதேச அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைகள் கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உடன் இணைந்துள்ளார்.

வங்கதேசம் புறப்படும்போது, “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை இந்தச் சந்திப்பு நிச்சயம் வலுப்படுத்தும். இதனால் இருநாட்டு மக்களுக்கு நன்மைகள் ஏற்படும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

எல்லை ஒப்பந்தம்: மம்தா புகழாரம்

பின்னர், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும்போது, “உற்சாக வரவேற்பு அளித்ததற்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நன்றி” என்றார் மோடி.

இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. “இப்போதுதான் தான் வங்கதேச மண்ணில் கால் வைத்தேன். இங்கிருந்தபடியே ட்வீட்டும் முதல் பதிவு இது. வங்கதேச சகோதர, சகோதரிகளுக்கு என் வணக்கங்கள். இந்தியா – வங்கதெசம் இடையிலான எல்லை ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா மற்றும் அகர்தலா இடையேயும், டாக்கா – ஷில்லாங் – குவாஹாட்டி இடையேயும் பேருந்து இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் வங்கதேச பிரதமர் ஹசீனா ஆகியோர் இணந்து தொடங்கி வைக்கின்றனர்.

பயணத்தின் முக்கியத்துவம்

கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, வங்கதேசம் வருமாறு மோடிக்கு தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார். இதன் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். பிறகு கடந்த நவம்பர் மாதம் காத்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் இருவரும் சந்தித்தனர்.

வங்கதேசத்துடன் 41 ஆண்டு கால எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க அரசியல் சாசன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறைவேறியது.

இந்நிலையில், இரு நாடுகள் இடையே நீண்டநாள் பிரச்சினையான தீஸ்தா நதிநீர் பங்கீடு குறித்து பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்பப்படுகிறது. மோடி தனது பயணத்தில், வங்கதேச அதிபர் முகமது அப்துல் ஹமீதையும் சந்தித்துப் பேசுகிறார்.

இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக வங்கதேசம் இருந்து வருகிறது. இரு நாடுகளிடையே கடந்த 2012-13ம் ஆண்டில் 534 கோடி டாலர்கள் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி 477.6 கோடி டாலராகவும் இறக்குமதி 56.4 கோடி டாலராகவும் இருந்தது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.