செய்திகள்

பசிலுக்கு மேலும் இரு நாள் விளக்கமறியல்: வெலிக்கடையில் அடைக்க உத்தரவு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாளை மறுநாள் வரை விளக்க மறியலில் வைக்க, கடுவெல நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 22ம் திகதி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவை, மே 5 வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ பின்னர், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில், அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது விளக்கமறியல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அங்கிருந்து இன்று காலையில் கடுவெல நீதிமன்றத்துக்கு அம்புலன்ஸ் வண்டியில், கொண்டு வரப்பட்டார். கடுவெல நீதிவான், அம்புலன்ஸ் வண்டிக்குள் சென்று, அவரைப் பார்வையிட்டு எதிர்வரும் மே 7ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்தும் பசில் ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாறு நீதிவானிடம், சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை நிராகரித்த நீதிவான், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.