செய்திகள்

பசில் உட்பட மூவருக்கு மே 5 வரை றிமாண்ட்: பாராளுமன்றம் செல்ல அனுமதி

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை மே 5 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கடுவெல நீதிமன்றத்தில் நேற்றிரவு உத்தரவிட்டுள்ளது.

பசில் ராஜபக்‌ஷவுடன் கைது செய்யப்பட்ட அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக்க, ‘திவிநெகும’ பணிப்பாளர் ஆர்.ஆர்.கே.ரணவக்க ஆகியோரும் மே 5 ஆம் திகதி வரை றிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

‘திவிநெகும’ நிதியில் பாரிய மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிதி மோசடிப் பிரிவுக்கு நேற்றுக்காலை அழைக்கப்பட்ட பசில் ராஜபக்‌ஷ, காலை 11.00 மணி முதல் சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்தே நேற்றிரவு கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அவர் றிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.  நேற்றிரவு 11.00 மணியளவில் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டுவரப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நிதிமன்றம் முன்பாக கூடிநின்றார்கள்.

பசிலை பிணையில் விடுவிப்பதற்கான முயற்சிகளை அவரது சட்டத்தரணிகள் மேற்கொண்ட போதிலும், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளையில், பசில் ராஜபக்‌ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அடுத்த வாரம் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கும் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது.