செய்திகள்

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி: நாடு திரும்பினால் விமான நிலையத்தில் கைதாவார்

திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை நடத்த முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடு திரும்பியவுடன் விமான நிலையத்திலேயே அவரைக் கைது செய்வதற்கான அனுமதியையும் நீதிமன்றம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.

மேலும் அவரை கைது செய்ய வேண்டாமெனக் கோரியும், கைது செய்யுமாறு முன்னர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரியும் பசிர் ராஜபக்ஷவின் சட்டத்தரணி யு.எல்.ஆர். த சில்வா கோரிக்கை ஒன்றை இன்று விடுத்தார்.

எனினும் அந்தக் கோரிக்கையை நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால நிராகரித்தார். இன்றைய வழக்கு விசாரணையில் பசில் ராஜபக்ஷ சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி யு.எல்.ஆர். த சில்வாவுடன் மேலும் 20 சட்டத்தரணிகள் மன்றிற்கு சமுகமளித்திருந்தனர்.

திவிநெகும திட்டம், மிக் விமானங்கள் புதுப்பித்தல், ஜனாதிபதி தேர்தலுக்கு அரச பணத்தை வீண் விரயம் செய்தமை என்கிற அடிப்படையில் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பசில் ராஜபக்ஷ சுகயீனம் விடுமுறையில் அமெரிக்காவுக்கு சென்றிருப்பதாக கூறிய சிரேஷ்ட சட்டத்தரணி யு.எல்.ஆர். த சில்வா, விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.