செய்திகள்

பசுமை பூமி காணி உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் தொடர்பில் பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் விளக்கம்

பசுமை பூமி காணி உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் தொடர்பில் சில அரசியல் கட்சிகளின் தலைமைகள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பசுமை பூமி காணி உறுதி பத்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் காணிகள் செல்லுபடியற்றது எனவும், அதில் உரியவர்கள் ஒப்பமிடப்படவில்லை, போலியானது என சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது எனறும் இது முழுமையான அரசாங்க அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு பத்திரம், இந்த பத்திரம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி உரிமையை உறுதி செய்கின்ற ஒரு பத்திரம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் காணி உரிமை ஜனவசம தோட்டத்திற்கும்,எஸ்.எல்.எவ்.பி தோட்டத்திற்கும் உள்ளபடியினால் அவர்களே ஒப்பமிட்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 200 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் சில மாதங்களில் முழுமையான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், அதற்கான நடவடிக்கையாக தோட்டங்களில் காணிகளை அளவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், காணிகளை அளந்து அதன் எல்லைகளை மதிப்பிட்டு இரண்டாவது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 2 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மலையகத்தில் காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், இவ்வாறு வழங்கப்படும் காணி உறுதியே இலங்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இருவரின் பெயரிலும் வழங்கப்படுகின்ற காணி உரிமை பத்திரம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் காணியை இடமாற்றம் செய்யும் போது ஜனவசம தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து இடமாற்றுமாறும் தெரிவித்த பெந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் மலையக மக்களை இந்த நாட்டிற்கு சொந்தமான மக்களாக மாற்றியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.