செய்திகள்

படகுகளை விடுவிக்கும் இலங்கை: செலவை ஏற்கும் தமிழக அரசு

இலங்கையில் இருந்து 81 படகுகளை தமிழகத்துக்குக் கொண்டு வரும் செலவை அரசு ஏற்கும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் 81 படகுகளை தமிழகத்திற்கு கொண்டு வர, 150 மீனவர்கள் அடங்கிய குழு இலங்கைக்கு அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அனுமதி பெற்று இந்த குழு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, படகுகளை கொண்டு வருவதற்கான எரிபொருள், உணவு மற்றும் பழுது நீக்கும் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால், பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 15ம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், அந்நாட்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.