செய்திகள்

படப்பிடிப்புக்குத் தடை: விக்ரம் அதிர்ச்சி

விக்ரம் நடிப்பில் அரிமாநம்பி இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பிற்காக மலேசியா புறப்பட படக்குழுவினர் தயாராகிக்கொண்டிருந்த கடைசிநேரத்தில் படப்பிடிப்பு இரத்தாகியிருக்கிறது.

படக்குழுவினர் எல்லோருக்கும் விமானப்பயணச்சீட்டெல்லாம் வாங்கிவிட்டார்களாம். பயணத்துக்குத் தயாராகிற நேரத்தில் பயணம் தடைபட்டிருக்கிறது. அதற்குக் காரணம் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கலைப்புலிதாணு கொடுத்த ஒரு புகார்தான் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தைத் தாணுவின் சகோதரர்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இடையில் திடீரென ஐங்கரன் நிறுவனத்துக்குப் படம் கைமாறியது.

எல்லாவற்றையும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து இவர்கள் படப்பிடிப்புக்குக் கிளம்பத் தயாராகியிருக்கிறார்கள். அப்போது, தாணு தரப்பிலிருந்து தொழிலாளர்கள்சங்கம் உட்பட திரைப்பட சங்கங்களுக்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், எங்கள் நிறுவனத்தில் அரிமாநம்பி படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கருக்கும் எங்களுக்கும் இடையில் சில சிக்கல்கள் இருக்கின்றன, அவற்றைச் சரிசெய்யாமல் அவர் அடுத்தபடத்தை இயக்கப்போகிறார் எனவே அவருக்கு நீங்கள் ஒத்துழைப்புக்கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருந்தார்களாம்.

இதனால் படப்பிடிப்புக்குப் புறப்பட்டவர்கள் இங்கேயே இருந்துவிட்டார்களாம். கடைசிநேரத்தில் திடீர்தடை என்பதால் நாயகன் விக்ரம் உட்பட படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். இந்தப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் வெளிநாடு சென்றிருப்பதாவும் அவர் வந்தபிறகு சிக்கலைச் சரி செய்து எல்லோரும் படப்பிடிப்புக்குக் கிளம்புவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.