செய்திகள்

படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்

தமிழகத்தில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என சென்னை தீவுத்திடலில் நடந்த தேர்தல் பிராசாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.சட்டசபை தேர்தல் பிராசரத்தை தொடங்கி வைத்த ஜெயலலிதா 21 அ.தி.மு.க., வேட்பாளர்களை இன்று அறிமுகப்படுத்தினார்.

பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:வௌ்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் வங்கி கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டது.

சமீபகாலமாக தமிழகத்தில் யாரை பார்த்தாலும் மதுவிலக்கு பற்றி கூறிவருகிறார்கள். பல அரசியல் கட்சி தலைவர்களும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறார்கள்.

மதுவை அறியாத தலைமுறையினருக்கு மதுவை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. யார் வேண்டுமானாலும் மதுவிலக்கை பற்றி பேசலாம். ஆனால், அதை கருணாநிதி பேசுவதற்கு தகுதி அற்றவர்.
மக்களுக்கு வரலாறு தெரியாது என கருணாநிதி நினைக்கிறார். தமிழகத்தில் 1971ல் மதுவிலக்கை நீக்கியவர் கருணாநிதி. மூதறிஞர் ராஜாஜி மதுவிலக்கை நீக்க வேண்டாம் என கெஞ்சி கேட்டும் மறுத்தார்.அப்படிப்பட்ட கருணாநிதி இன்று வாக்கு அரசியலுக்காக மதுவிலக்கு குறித்து பேசிவருகிறார்.ஒரேடியாக தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை.

படிப்படியாக தான் கொண்டு வர முடியும். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்து படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வரும்.

சில்லரை விற்பனை கடைகளின் நேரம் படிப்படியாக குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பார்கள் மூடப்படும். மதுவால் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து மீண்டு வர நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.மாநிலம் செழிக்க, தொழில் வளர்ச்சி ஏற்பட அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அவர், தனது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.

N5