செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளில் பாரபட்சம்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

இலங்கையில் கொலை செய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகள நடைபெறுகின்றபோதிலும், கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஊடகவியலளர்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

தென் இலங்கை ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஊடகத்துறை அமைச்சர் ஜயந்த கருனாதிலகவுடன் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு முதல் 40 வரையான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் இவர்களில் நால்வர் சிங்களவர்கள் என்றும் ஏனையவர்கள் தமிழர்கள் என்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிய செயலாளர் பாரதி இராசநாயகம் தனது கவனத்துக்கு கொண்டுவந்திருப்பதாகவும் தெரிவித்த முதலமைச்சர் இவர்களில் லசந்த விக்கிரமதுங்க மற்றும் எக்னலிகொட ஆகிய சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலை குறித்து விசாரணைகள் நடைபெறும் அதேவேளை நிமலராஜன், சுகிர்தராஜன், நடேசன் மற்றும் சிவராம் போன்ற தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார். இவ்வாறு 35 சம்பவங்கள் விசாரணைகள் இன்றி இருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் செய்திகளுக்கிடையே பெரும் வேறுபாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இது சரியான புரிதல் இல்லாமை அல்லது செய்திகளை திரிபு படுத்தி வெளியிட வேண்டும் என்ற உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

தென் ஆபிரிக்காவிலே அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது என்றும் ஆனால் இலங்கையிலே அரசியல் தீர்வு தொடர்பில் எந்த நடவடிக்கைகளும் இல்லாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பதாகவும் கூறிய முதலமைச்சர் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படாமல் ஊடகவியலாளர்களின் கூட்டு சந்திப்பு போன்ற நல்லிணக்க நடவடிக்கைகள் எந்த பயனையும் தரப்போவதில்லை என்றும் அவர் அழுத்தி உரைத்தார். அரசியல் தீர்வுத்திட்டமே சரியான முறையில் நல்ல உறவுகளுக்கான சூழ்நிலைகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.