செய்திகள்

படையினர் வசமுள்ள தனியார் காணிகளை இவ்வருட இறுதிக்குள் ஒப்படையுங்கள்: ஜனாதிபதியிடம் வடமாகாண சபை கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் ஆயுதயப் படைகள் வசமிருக்கும் அனைத்துத் தனியார் காணிகளையும் கட்டடங்களையும் இந்த வருட முடிவுக்கு முன்னதாக அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு மாகாண சபை ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

இது குறித்து சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் தெவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

“வடக்கு மாகாணத்தில் ஆயுத படைகள் வசமிருக்கும் அனைத்துத் தனியார் காணிகளையும் கட்டடங்களையும் இந்த வருட முடிவுக்கு முன்னதாக அவற்றின் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களையும், இலங்கை அரசாங்கத்தினையும் வடக்கு மாகாணசபை கோருகிறது.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே, இந்தக் கோரிக்கையை மேற்கொள்ளும் போது இச்சபையானது போர் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இந்தக் காணிகளினதும் கட்டடங்களினதும் உரிமைகளை மறுப்பது நியாயமற்றதும், அநீதியானதுமான விடயம் எனக்கருத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்தக் காணி உரிமையாளர்கள் நலன்புரி நிலையங்களிலும், வாடகை வீடுகளிலும், நண்பர்கள் உறவினருடனுமே இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வருவதைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

இவ்விடயத்தைச் சுட்டிக் காட்டும் ஒரு விடயமாக நாம் பின்வரும் விபரங்களைக்காட்டும் நிரல்களை இத்துடன் இணைக்கின்றோம். 1. நிரல் -அ- வலிகாமம் வடக்கு பிரிவின் 28 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆயுதப்படைகள் வசமிருக்கும் 6526 ஏக்கர் தனியார் காணிகள் 2. நிரல் -ஆ- தங்கள் சொந்தக்காணிகளில் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாது சுகாதாரமற்ற நிலமையில் 4656கும் மேற்பட்ட உள்ளக இடம் பெயர்வினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் 03 நலன்புரி நிலையங்கள் 3. நிரல் -இ- தென்மராட்சிப் பகுதியிலுள்ள 10 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆயுதப்படைகளின் வசமிருக்கும் 16 வீடுகள் மற்றும் 30 காணிகள். எனவே வடக்கு மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் ஆயுதப்படைகளின் வசமிருக்கும் தனியார் காணிகளையும் கட்டடங்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேன்மை தங்கிய தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.”

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.