செய்திகள்

படைவீரர் ஞாபகார்த்த விழாவில் ஜனாதிபதி, பிரதமர் அதிதிகள்: மாத்தறையில் இன்று

படை வீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா மற்றும் தேசிய படை வீரர் நினைவு தின பிரதான வைபவங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான வைபவம் இன்று காலை 8.00 மணிக்கு மாத்தறை நகரிலும், தேசிய படைவீரர் நினைவு தின பிரதான வைபவம் நாளை மாலை 4.00 மணிக்கு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தன புரவில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முதற் தடவையாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், பிரதம நீதியரசர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், சமய தலைவர்கள். அரச மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.