செய்திகள்

பட்டாசால் தீப்பிடித்த அதிமுக கட்சி அலுவலகம்

ஆர்.கே.நகரில் அதிமுக முன்னிலையில் இருப்பதை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய போது தீப்பொறி பறந்து கீற்றுக் கொட்டகையால் ஆன அலுவலகம் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதா முன்னிலையில் உள்ளார் என்பதை அறிந்த அதிமுகவினர் தமிழக முழுவதும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இனிப்புகளும், பட்டாசுகளுமாக அவர்களின் கொண்டாட்டம் களை கட்டி வருகின்றது.

இந்நிலையில் இந்த வெற்றியினை மன்னார்குடி அதிமுகவினர், மன்னார்குடி அதிமுக நகர அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு கீற்று கொட்டகையில் இருந்த அதிமுக அலுவலகம் எரிந்து தீக்கரையானது. இதில் அங்கிருந்த கோப்புகளும், முக்கிய பொருட்களும் கூட எரிந்து நாசமாகின. அதன் அருகே இருந்த 10க்கும் மேற்பட்ட குடிசைகளும் தீயில் கருகின. 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.