செய்திகள்

பண்டத்தரிப்பில் மாடு மேய்க்க சென்ற சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்றவருக்கு விளக்கமறியல்

மாடுகளை மேய்ப்பதற்காகத் தனியாகக் காட்டுப் பகுதிக்குச் சென்ற சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற 20 வயது இளைஞனை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் திருமதி.கறுப்பையா ஜீவராணி நேற்று 08 ஆம் திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

யாழ்.பண்டத்தரிப்புப் பிரான்பற்றைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாடுகளை மேய்ப்பதற்காகத் தனியாகக் காட்டுப் பகுதிக்குச் சென்ற போது சிறமியைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர் மறைவான இடமொன்றில் வைத்துப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.

இளைஞனின் உடும்புப் பிடியிலிருந்து தப்பி வந்த சிறுமி நடந்தவற்றை ஒன்றும்விடாமல் பெற்றோருக்குத் தெரியப்படுத்தினார்.பெற்றோர் சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற தினமே குறித்த இளைஞனைக் கைது செய்தனர்.

இதனையடுத்து நேற்றுத் திங்கட்கிழமை சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் மேற்கண்டவாறு விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
யாழ்.நகர் நிருபர்-