செய்திகள்

பந்துவீச்சாளரை இடித்து தள்ளிய தோனி

பங்களாதேசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிகெட் போட்டியில் ஓட்டம் எடுக்க ஓடும் போது குறுக்கே வந்த பங்களாதேசு பந்துவீச்சாளரை இந்திய அணித் தலைவர் தோனி இடித்துத் தள்ளினார்.

இந்திய அணி 123/4 என்று தோல்வியைத் தவிர்க்க போராடி வந்த நேரத்தில் ஆட்டத்தின் 25-வது ஓவரில் பங்களாதேசின் இளம் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோனிக்கு ஒரு பந்தை யோர்க்கராக வீசினார். தோனி அதனை மிட் ஆஃபில் திசையில் தட்டி விட்டு ஒரு விரைவு ஓட்டத்திற்காக எதிர் திசை நோக்கி ஓடி வந்தார். அப்போது பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இடது புறமாக வேண்டுமென்றே நகர்ந்து வந்து தோனிக்கு இடைஞ்சல் ஏற்படுத்துமாறு வந்தார். அவ்வேளை தோனி அவரை பலமாக இடித்துத் தள்ளினார்.

இதனால் பந்துவீச்சாளருக்கு லேசாக பொறி கலங்கிவிட்டது. உடனேயே தோனி நடுவரிடம் முஸ்தபிசுர் ரஹ்மான் வேண்டுமென்றே குறுக்காக வந்தார் என்று சைகை காட்டினார்.

இச் செயலால் பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தடுமாறி அந்த ஓவர் பந்து வீசாமல் மைதானத்தை விட்டுச்சென்றார்.

சிறிது நேரம் தோனி செய்கை பற்றி அதிர்ச்சி நிலவினாலும் தமிம் இக்பால் நடந்ததைப் புரிந்து கொண்டு புன்னகைக்க, அவர் தோள் மீது கைபோட்டபடி தோனி அளவளாவியதும் நிகழ்ந்தது.