செய்திகள்

பந்துவீச்சு பலவீனம் இந்தியாவின் வாய்ப்புக்களை பாதிக்கின்றது – ரொய்ட்டர்

இந்தியா 2011 இல் கைப்பற்றிய உலகிண்ணத்தை தக்கவைப்பதற்காக போராடும் நிலையில் மகேந்திர சிங் டோனி தனது பந்துவீச்சாளர்கள் விடயத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்.

பந்து வீச்சு என்பது எப்போதும் இந்தியாவின் பலமாக விளங்கியதில்லை. போட்டிகளை வெல்வதற்கு அவர்கள் தங்கள் துடுப்பாட்ட வீரர்கள் பெறக்கூடிய மேலதிக ஓட்டங்களையே நம்பியிருந்துள்ளனர்.

இசாந் சர்மா தலைமையிலான அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சயமாக எதிரணிகளை நடுங்கசெய்யப்போவதில்லை. அதேவேளை இந்திய துணைக்கண்டத்தின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களுக்கு வெளியே இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பிரகாசித்ததில்லை.

அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரை இழந்த , முத்தரப்பு போட்டிகளில் ஒன்றை கூட வெல்லாத இந்திய அணிக்கான உலககிண்ண வாய்ப்புகள் குறித்து பயிற்றுவிப்பாளர் டன்கன் பிளெட்ச்சர் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்.

கடந்த சில வருடங்களில் இந்த அணி சகலவிதமான நிலைமைகளையும் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுவந்துள்ளது, இதுவே இந்த அணியின் சிறப்பு என்கிறார் அவர், இதன் காரணமாகவே எங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனங்கள் நன்கு அறியப்பட்ட விடயமாக காணப்படும் அதேவேளை அடித்தாடக்கூடிய பல வீரர்களை கொண்டிருந்தாலும் துடுப்பாட்ட வரிசை நம்பிக்கை தருவதாகயில்லை.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித்சர்மாவின் திறமை குறித்து சந்தேகங்கள் இல்லை- இரு இரட்டைசதங்கள் பெற்றவர். எனினும் தொடர்ச்சியாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த அவர் சிரமப்படுகின்றார்.

சிகார் தவான் தற்போது ஓட்டங்களை பெறுவதற்கு எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக அவரால் இந்தியயாவிற்கு சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியாது,அவரது இடத்தை ரஹான கைப்பற்ற கூடும்.

விராட் கோலியின் சிறந்த நிலை, ரெய்னாவின் ஓரு நாள் போட்டிதிறன் மற்றும் போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் டோனியின் திறன் ஆகியவையே உலககிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அளிக்கின்ற விடயங்களாகும்.

எனினும் பிளச்சர் அணி கடந்த சில வருடங்களில் மூன்று முக்கிய கிண்ணங்களை வென்றுள்ளதை சுட்டிக்காட்டுவதுடன், முக்கிய போட்டிகளை எவ்வாறு வெல்வது என்பது அணிக்கு தெரிந்த விடயம் என்கிறார்.