செய்திகள்

பனாமா ஆவணக் கசிவு: இலங்கை மத்திய வங்கியும் விசாரணை

பனாமாவின் மொசாக் பொன்செக்க நிறுவனத்திலிருந்து கசிந்த ஆவணங்களில் இருப்பதாகக் கூறப்படும் இலங்கையர்களின் பெயர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்துப்பட்டு வருவதாக  மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பனாமா நிறுவனத்திலிருந்து சில மில்லியன் கணக்கான ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஆராயாமல் எந்த முடிவுக்கும் செல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, பனாமா ஆவணங்களில் வெளியாகியுள்ள தகவல்களை வெளியிடுவதில், சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், உள்நாட்டு சட்டத்தின்படி குற்றச்சாட்டு உறுதிப்படுத்தபடாதவரை சந்தேகத்திற்குள்ளாகியிருப்பவர்களின் பெயர்களையோ, தகலவல்களையே ஊடகங்களிடம் கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

அத்தோடு கசியவிடப்பட்ட ஆவணங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தெரிவித்தார்.

உலக நாடுகளிலுள்ள செல்வந்தர்கள் உள்நாட்டில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக, பனாமாவிலுள்ள மொசாக் பொன்செக்க நிறுவனத்தை பயன்டுத்தியுள்ளனர் என்ற தகவலுடன், மில்லியன் கணக்கான ஆவணங்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்த ஆவணங்களில் இலங்கையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயர் விபரங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள பின்னணியில், மத்திய வங்கி ஆளுநரின் இந்த கருத்து வந்துள்ளது.

n10