செய்திகள்

பன்னங்கண்டியில் குடியிருக்கும் மக்களின் காணிப்பிணக்கிற்கு தீர்வு காணப்பட வேண்டும்: சந்திரகுமார்

பல தசாப்தங்காளக பன்னங்கண்டியில் வாழ்ந்துவரும் மக்கள் அப்பகுதியிலேயே தமது வாழ்வாதாரத்திற்கான வருமானத்தைப் பெற்று வருகின்றனர் மாற்றிடம் அம் மக்களின் வாழ்வியலுக்கு பொருத்தமற்றது எனவே அவர்கள் எதிர்கொண்டுவரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு குடியிருக்கும் காணிகளுக்கு உரிமம் வழங்குவதனூடாகவே தீர்வு காணப்பட வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று பன்னங்கண்டியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்;.

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் பன்னங்கண்டி பிரதேசத்தில்; வழங்கப்பட்ட மத்திய வகுப்புத்திட்டக் காணிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அக்காணிகளில் குடியிருக்கவில்லை அத்தோடு அவற்றை அபிவிருத்தி செய்யவோ நாட்டின் உணவு உற்பத்திக்கு பங்களிப்பு செய்யவோ இல்லை இந்நிலையில் அன்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக நாட்டின் பல் வேறு பிரதேசங்களிலிருந்து இடம் பெயர்ந்த வறிய மக்கள் அக்காணிகளில் குடியேறினர் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை நோக்காகக்கொண்டு அக்காணிகளை பண்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்வாறு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் அவர்கள் அக்காணிகளையே தமது நிரந்தர வாழ்விடமாக கருதி தமது அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தையும் நிர்ணயித்துள்ளனர்.

எனினும் இன்று இக்காணிகளுக்கான சட்ட ரீதியான உரிமங்களைப் பெற்றுக்கொள்வதில் அங்கு குடியிருக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றத் தயாராகவிருக்கும் ஆட்சியுரிமைச்சட்டமூலம் இவர்களுக்கான காணி உரிமங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்நிலையில் அம்மக்கள் இன்றுவரை தாம் குடியிருக்கும் காணிகளில் எவ்விதமான நிரந்தர வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாதுள்ளனர். வீட்டுத்திட்டங்கள் உற்பட எவ்வித நிரந்தர உதவித்திட்டங்களும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இதனால் ஒவ்வொரு வருடமும் வரும் மாரிகாலத்தில் இவர்கள் இடம் பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைகின்றனர். எனவே இந்த மக்களின் அவலங்களுக்கு தீர்வு காண் பதற்காக நாம் மீள்குடியேற்ற காலம் தொடக்கம் தொடர்ச்சியாக பல முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றோம்.

பன்னங்கண்டி கிராமம் மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் திட்டக்காணிகளில் குடியிருக்கும் அனைவரது பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நோக்கு அதன் ஒரு அங்கமாக கண்டாவளை நாதன் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் எதிர்கொண்ட காணி உரிமம் தொடர்பான பிரச்சினைக்கு எமது தொடர் முயற்சியின் பயனாக தீர்வினைப் பெற்றுக்கொடுத்திருக்கினறோம் அது போன்று கண்டாவளையில் மேலும் சில கிராமங்களில் வாழும்மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்கான செயற்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன அதுபோன்று பன்னங்கண்டி பிரதேச மக்களின் பிரச்சினைக்கும் மிக விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் அதற்கமைவாக இம்மக்களின் வாழ்விலும் ஒளியேற்றப்படுமென நாம் நம்புகின்றோம். என அவர்மேலும் தெரிவித்தார்.

பன்னங்கண்டியில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் வடக்குமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் பன்னங்கண்டி கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் புகனேந்திரன் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவான மக்களும் கலந்துகொண்டனர்.