செய்திகள்

பன்னிரண்டு உயிர்களில் வாழும் கிஷோர்!

பத்தாவது பெயிலானவுடன் படிப்பை விட்டுவிட்டு தனது பதினாறாவது வயதிலேயே சினிமாவுக்கு வந்தார் கிஷோர். “ஆடுகள’திற்காக தேசிய விருது வாங்கும்போது அவருக்கு வயது 32. “ஈரம்’ “எங்கேயும் எப்போதும்’ “பரதேசி’ உள்பட பல படங்களை தனது எடிட்டிங் திறமையால் பிரகாசிக்க வைத்தவர் இவர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நண்பர்களுடன் பயணம் செய்து அதைத் தனது “முகப்புத்தக’த்தில் “நீண்ட நிறைவேறாத பயணம்’ எனப் பதிந்திருந்தார் கிஷோர். அதைப் பதிந்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் “நீண்ட நிறைவேறாத பயண’த்திற்கு அவர் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டதைத்தான் சினிமாவை நேசிப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘தொடர்பில்லாமல் நான் எடுத்த பல காட்சிகளைத் தொடர்புப்படுத்தி, அவற்றை ஒருங்கிணைத்து “ஆடுகள’த்திற்கு உருவம் கொடுத்ததே கிஷோர்தான்’ என தனது நண்பனைப் பற்றி ஒரு பேட்டியில் பெருமையாகக் கூறியிருந்தார் வெற்றிமாறன். தனது இணைபிரியாத நண்பனான வெற்றிமாறனின் “விசாரணை’ படத்தில் வேலை பார்த்தவாறேதான் மயங்கி விழுந்து கோமா நிலைக்குச் சென்று உயிர்விட்டுள்ளார் கிஷோர்.

“வெற்றிமாறன் ஒரு காட்சியை விவரித்துக் கொண்டிருந்தார். அதற்கு கிஷோர் பக்கம் இருந்து ரெஸ்போன்ஸ் இல்லை. “கிஷோர்…ஏய்.. கிஷோர்’-னு வெற்றி சார் தட்டிப்பார்க்கும் போதுதான் கிஷோர் மயங்கிப்போனது தெரிய வந்தது. அடுத்த நிமிஷமே காரில் விஜயா ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துப்போனோம். போகும்போது கிஷோர் கண் முழிச்சு எனக்கொண்ணும் இல்லை. தண்ணி கொடுங்க சரியாயிடும் என்றார். வெற்றி சார்தான் வற்புறுத்தி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்கொன்னும் இல்லைனு தான் நானும் நினைச்சேன். ஆனால், இப்பிடி இடையில விட்டுப் போய்ட்டாரே. சாகிற வயசா அவருக்கு…?’ சொல்லும் போதே வெடித்து அழ ஆரம்பிக்கிறார் நாகராஜ். கிஷோரின் ஐந்து வருட உதவியாளர்.

நீண்ட காலமாகக் காதலித்து வந்த பெண்ணை அடுத்தமாதம் மண முடிப்பதாக இருந்தார் கிஷோர். ஜனவரி மாதத்தில் திருமணத்தை நடத்துவதாக இருந்து, சில காரணங்களால் தள்ளிப்போட்டிருக்கிறார்கள். “கல்யாணம் பண்ணி வைப்பேன்னு பாத்தா உனக்கு கருமாதி பண்ணி வைக்கிறேனே. இறைவா உனக்கு கண்ணே இல்லையா’ இயக்குநர் லாரன்ûஸ கட்டியணைத்தபடி அழும் கிஷோரின் அப்பாவை அணைத்தபடி தேம்பினார் லாரன்ஸ்.

“தியாக தீபம்’ திலீபனின் வாழ்க்கையை படமாக எடுக்க விரும்புவதை கிஷோரிடம் ஒருமுறை சும்மா சொன்னேன். திலீபனின் வாழ்க்கையை அவ்வளவு ஆர்வமாகக் கேட்டார். அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்களை விவரித்த போதெல்லாம் உடைந்து அழுதார். “நான்தான் சார் எடிட் செய்வேன். நமது போராட்டத்தின் அறத்தை உலகுக்கு கொண்டுபோகணும். அதைச் செய்யாமல் நாம் வாழ்வதில் அர்த்தமில்லைனு’ சொல்லி ஒரு பைசா கூட வாங்காமல் “திலீபன்’ படத்தை எடிட் செய்து கொடுத்தார். அற்புதமான எடிட்டர் மட்டுமல்ல. அற்புதமான மனிதரும் கூட என கிஷோரின் இழப்பை நம்ப முடியாமல் பேசுகிறார் “திலீபன்’ படத்தின் இயக்குநரான ஆனந்த் மூர்த்தி.

“உயிரிலே கலந்தது’ படத்தில் நடித்தபோதுதான் சூர்யாவும் ஜோதிகாவும் காதலில் விழுந்தார்கள். இந்தப் படத்தைத் தயாரித்தவர் சிவசக்தி பாண்டியனிடம் மேனேஜராக இருந்த “முத்அம்’ சிவகுமார். இவரின் சித்தி பையன் தான் கிஷோர். 16 வயது சிறுவனான கிஷோரை சினிமாவுக்கு கைப்பிடித்து அழைத்து வந்ததும் இவர்தான்.

“அவனுக்கு ஃபோட்டோகிராபியிலதான் ஆசை, இருந்தாலும் அவனோட கதை சொல்ற ஆற்றலைப் பாத்திட்டு, இரட்டை எடிட்டர்கள் லான்சி-மோகனிடம் “காதல் கோட்டை’ படத்தில் உதவியாளரா சேர்த்துவிட்டேன். ஃபோட்டோகிராபராகணும்னு சொல்லிட்டிருந்தவன் எடிட்டராகி, தேசிய விருதும் வாங்கினான். லான்சி-மோகன் கிட்ட இருந்தப்பவே காலை ஏழு மணிக்கு சைக்கிளை எடுத்திட்டு ஆபீஸ் போய்டுவான். அவனை மாதிரியொரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை. இந்த வயதில இப்படியாயிடுச்சே’ எனக் கண் கலங்கினார் சிவகுமார்.

கிஷோர் காபி, டீ கூடக் குடிக்க மாட்டார், சைவச் சாப்பாடுதான் சாப்பிடுவார், புகைபிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்கிறார்கள் அவரின் நெருங்கிய நண்பர்கள். மூளைக்கு இரத்தம் செல்லும் இரண்டு பிரதான குழாய்களிலும் பெரிய அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவருக்கு 36 வயதில் இவ்வளவு பெரிய அடைப்பு வந்ததுக்கான காரணம்தான் புரியவில்லை. இரவு பகலாக ஓய்வில்லாமல் வேலைபார்த்ததுதான் இவரின் மரணத்திற்குப் பிரதான காரணம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

இரவு பகலாக ஓய்வில்லாமல் தமது கனவைத் துரத்திக் கொண்டிருக்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு கிஷோரின் மரணம் பெரியதொரு அபாய சங்கை ஊதிச் சென்றிருக்கிறது. தமது கலையின் மேல் வைக்கும் காதலை, தமது உடலின் மீதும் அவர்கள் வைக்க வேண்டும் என்ற அறிவுரையைக் கூறிச் சென்றுள்ளது.கிஷோருக்கு பல நாட்களாகவே தலை வலி இருந்திருக்கிறது. இடது கை மரத்துப்போகிற அளவுக்கு கையில் வலி இருந்திருக்கிறது. அதற்கு பிசியோதெரபி எடுத்து வலியைக் குறைத்துள்ளார். ஒரு வாரம் முன்பாக கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது தலைவலியால் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். தலைவலியும், கை மரத்துப் போவதும்தான் மூளையில் இரத்தம் கட்டிப்போவதற்கான அறிகுறிகள். வேலைப்பளுவால் அதைக் கவனிக்காமல் மருத்துவமனைக்குப் போவதைத் தள்ளிப்போட்டு வந்துள்ளார் கிஷோர்.

“ஒருபடம் முடித்து அதில் இருந்து வெளியில் வர எனக்கு ஒருமாதத்திற்கு மேல் ஆகும். ஆனால், கிஷோர் ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கு மேல் பணி புரிந்துகொண்டிருந்தார். சினிமா குறித்த உயர்ந்த கனவுகளும் நோக்கங்களும் தேடல்களும் கொண்ட ஒருவர் தனது உயர்ந்த நோக்கங்களோடு வணீக ரீதியான படங்களுடன் தொடர்ந்து வேலை செய்வது என்பது சாதாரணமான விஷயமல்ல. அது அவர் மூளைக்குள் ஒவ்வொரு நாளும் நடக்கிற துரத்தல்.

நமது படங்களில் சராசரியாக குறைந்தபட்சம் 2000 ஷாட்கள் இருக்கின்றன.அதுவும் டிஜிட்டல் வந்த பிறகு இந்த ஒவ்வொரு காட்சியும் சராசரியாக ஐந்து டேக்குகள் வரை எடுக்கப்படுகின்றன. பத்தாயிரத்தில் இருந்து சரியான 2000த்தை தேர்வு செய்யவேண்டும். அதை வரிசையாக்கி, அதற்குள் ஒரு லயத்தை உருவாக்க வேண்டும். இதுபோல ஒரே நேரத்தில் ஐந்து படங்கள். ஒன்று ஆக்ஷன், இன்னொன்று திரில்லர், மற்றொன்று ரொமான்ஸ் இப்படிப் பலவகைப்பட்ட காட்சிகளோடு ஒரு படத்தொகுப்பாளர் பணிபுரியவேண்டும்.

இதில் ஒரு படத்தை உரிய நேரத்தில் தயார் செய்து கொடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் காலக்கெடுக்கள் நிச்சயம் இருக்கும். அந்த மன அழுத்தம் கிஷோரின் மூளையின் இரத்த ஓட்டத்தைப் பாதித்திருக்க வேண்டும்’ என்கிறார் கிஷோரின் நெருங்கிய நண்பரும் ஒளிப்பதிவாளருமான செழியன்.

இருதயம், இரண்டு கிட்னிகள், கண்கள், ஈரல், நுரையீரல் உள்பட 12 உடல் உறுப்புகள் கிஷோரின் குடும்பத்தால் முறையாக அரசாங்கத்திடம் தானம் செய்யப்பட்டிருக்கின்றன. அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அவரது கிட்னியை இன்னொருவருக்குப் பொருத்தி உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இறந்தும் 12 உயிர்களில் வாழ்கிறார் கிஷோர்.

இயக்குநர்கள், எடிட்டர்கள், ஒளிப்பதிவாளர்கள் என சினிமாவின் டெக்னிக்கல் பிரிவு சார்ந்த பெரும்பாலானவர்கள் கிஷோரின் மரணச் சடங்கில் கலந்து கொண்டனர். ஆரி, கிருஷ்ணா, சிவகார்த்திகேயன் ஆகிய மூன்றே மூன்று நடிகர்கள்தான் கிஷோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். “ஆடுகள’த்திற்காக கிஷோருடன் தேசிய விருது வென்ற தனுஷ் கூட கலந்து கொள்ளவில்லை.

“பெரிய பெரிய ஹீரோல்லாம் மிட் நைட்ல ரஷ் பாக்க வருவாங்க. எத்தனை ஹீரோக்களுக்கு “வெட்டி ஒட்டி’ பேமஸôக்கியிருக்காரு கிஷோர். ஆனா, அவர் சாவுக்கு ஒரு நடிகன் கூட வரல. “ஹீரோவா இருக்கிறது மேட்டர் இல்லை, மனுஷனா இருக்கணும் அதுதான் சார் மேட்டர்’ கிஷோரின் ஆபீஸýக்கு முன்பாக சாப்பாட்டுக் கடை வைத்திருக்கும் ஒரு எளிய சகோதரனின் மனக் குமுறல் இது.

சினிமா எக்ஸ்பிரஸுக்காக  அருளினியன் எழுதியது