செய்திகள்

பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா கைதா? அதிமுகவில் பரபரப்பு

கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது, ஓ.பி.எஸ். தம்பி ராஜாவின் ‘டார்ச்சர்’ காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது.

இது தவிர அதிகாரிகளை மிரட்டுவது, வைகை ஆற்றுப்படுகையில் திருட்டு மணல் அள்ளி விற்பது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் ராஜா மீது எழுந்துள்ளது.

இந்நிலையில், தான் முதல்வர் பதவியில் இல்லாத போது எந்தெந்த துறைகளில் பைல்கள் கையெழுத்தானது, எவ்வளவு முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த, முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் மூலம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த குழுவினர் ஒவ்வொரு துறையில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் பற்றி தனியாக விசாரணை நடத்தியதாகவும், இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பெரியகுளம் பூசாரி நாகமுத்து தற்கொலை தொடர்பான வழக்கு பைல்களை உடனே சென்னைக்கு கொண்டு வரும்படி பெரியகுளம் டி.எஸ்.பி.க்கு தமிழக அரசிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது. இதைத் தொடர்ந்து தலைமை உத்தரவின் பேரில் பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக காவல்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.