செய்திகள்

பப்புவா நியூகினியில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியா தீவுப்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

கடந்த ஒரு வாரமாக பப்புவா நியூ கினியா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் நிகழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 7.5 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது.

அரவா நகருக்கு தென் மேற்காக 150 கி.மீ தொலைவில், கடலுக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா என்பது பற்றி இதுவரை தகவல் எதுவும் வரவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் பசிபிக் கடலில் சுனாமி ஏற்படும் ஆபத்து உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.மேலும் கடலில் ஒரு மீட்டர் அளவுக்கு அலைகள் எழக்கூடும் என்றும், 300 கிலோமீட்டர் தூரம் அளவிற்கு கடலில் சுனாமியின் தாக்கம் இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.