செய்திகள்

பம்பலப்பிட்டி கொலை: பெண்ணின் பூதவுடலை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு

பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பூதவுடலை பொறுப்பேற்க உறவினர்கள் மறுத்துள்ளனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. மேலதிக ஆய்வுகளுக்காக உடற்பாகங்களை சட்ட வைத்திய அதிகாரி பெற்றுக்கொண்டுள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஆய்வுகள் நிறைவுபெற்றதன் பின்னரே இவரது மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில் பூதவுடலை பொறுப்பேற்பதற்கு உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இதற்கமைய பூதவுடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.