செய்திகள்

பரபரப்பான நிலையில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்: கட்சித் தலைவர்கள் காலை சந்திப்பு

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கும் திகதி குறித்து இன்று காலை நடைபெறும் கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு. பீ. பீ. தசநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபைக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட அமர்வு இன்று இடம்பெறுகிறது. ஆனால் அரசியலமைப்பு சபைக்கான பிரதிநிதிகளை அங்கீகரிப்பதை விட நம்பிக்கையில்லா பிரேரணையே முக்கியமானது என்று சில ஐ. ம. சு. மு. கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது இந்த விவகாரம் குறித்து எதிர்தரப்பு கேள்வி எழுப்பியதாக அறிய வருகிறது. அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கும் திகதி குறித்து இன்றைய கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்க முடியுமென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதன் போது அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்சித் தலைவர் கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடுகிறது. இதன்போது இன்றைய தினம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என ஐ. ம. சு. மு கட்சி தலைவர்கள் கோர இருப்பதாக அறிய வருகிறது.

அரசியலமைப்பு சபைக்கான சிவில் பிரதிநிதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக் கையில்லா பிரேரணையையே இன்று விவாதிக்க வேண்டும் என ஐ. ம. சு. மு. வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியலமைப்பு சபைக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ள இரு அமைச் சர்கள் குறித்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ. ம. சு. மு. கூட்டுக் கட்சிகள் சிவில் பிரதிநிதிகளாக சிபார்சு செய்யப்பட்டுள்ள ராதிகா குமாரசுவாமி, ஏ. பி. ஆரியரத்ன ஆகியோர் தொடர்பிலும் தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.

சிவில் பிரதிநிதிகளை அனுமதிப்பது தொடர்பான பிரேரணையை சாதாரண பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்ற முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார். இவர்களின் நியமனத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்திலே சுயாதீன ஆணைக் குழுக்களை நியமிக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.