செய்திகள்

பரபரப்பை கிளப்பிய சச்சினின் சுயசரிதை புத்தகம் வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்ட்ரோவாக வர்ணிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், தனது கிரிக்கெட் கால வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்து எழுதிய சுயசரிதை புத்தகம் மும்பையில் இன்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குறித்து சச்சின் தெரிவித்துள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது.குறிப்பாக 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து டிராவிட்டை நீக்க எனது உதவியை பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கேட்டார் என்று தனது சுயசரிதை புத்தகத்தில் சச்சின் தெரிவித்துள்ளார்.

இதனை சேப்பல் மறுத்துள்ளபோதிலும், சேப்பல் குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் போன்றோர் தெரிவித்துள்ளனர்.
02
இந்நிலைலையில் மேற்கூறிய பரபரப்பு காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சச்சினின் சுயசரிதையை சொல்லும் ‘Playing it my way’ என்ற புத்தகம் மும்பையில் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சச்சின் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் வி.வி. லக்‌ஷ்மண் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இப்புத்தகம் அதிகாரப்பூர்வமாக இன்று மாலைதான் வெளியிடப்பட்டது என்றாலும், அதற்கு முன்னதாகவே புத்தகத்தின் முதல் பிரதியை சச்சினின் தாயார் ரஜினி பெற்றுக்கொண்டார். இத்தகவலை புகைப்படத்துடன் சச்சின் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.