செய்திகள்

பலாலியில் இந்திய அதிகாரிகள் குழு: விமான நிலையத்தை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவது தொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று நேரில் ஆராய்ந்துள்ளது. சென்னையில் இருந்து கொழும்பு வந்திருந்த இந்திய விமான நிலைய அதிகாரசபையின் ஐந்து அதிகாரிகள் நேற்று பலாலிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இவர்களுடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் நட்ராஜனும், பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவது தொடர்பான ஆய்வுகளில் பங்கேற்றனர்.

தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்குடன் முதல்நிலை ஆய்வை மேற்கொள்வதற்கே, இந்திய அதிகாரிகள் குழு பலாலிக்கு வந்திருந்ததாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவினரின் அறிக்கையைத் தொடர்ந்தே, விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேவேளை, பலாலி வந்திருந்த இந்தியாவின் விமான நிலைய அதிகாரசபையின் அதிகாரிகள் குழு, விமான நிலையத்தை மேலும் விரிவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதனை அபிவிருத்தி செய்தாலே போதும் என்றும் தெரிவித்ததாக இந்தியத் துணைத் தூதுவர் நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டம் இல்லை என்பதால், விமான நிலைய சுற்றாடலில் உள்ள காணிகள் சுவீகரிக்கப்படும் ஆபத்து ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

R-06