செய்திகள்

பலாலியில் இராணுவத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட அனந்தி

பலாலி உயர் பாதுகாப்பு வலயத் தினுள் அமைந்திருக்கும் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு பக்தர்களை உள்ளே செல்ல அனுமதிப்பதாக படைத்தரப்பு அறிவித்திருந்தது. இதற்கு முன்னரும் பக்தர்களில் ஒரு பகுதியினரை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அழைத்து சென்றிருந்த நிலையில் அங்கு அமைந்திருந்த மாட்டுப் பண்ணைகள் போன்றவை தொடர்பில் தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் தான் பிறந்த பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை உள்ளே அனுமதியாது படையினர் நேற்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

முதலில் அவரது கைத்தொலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளை கையளித்துவிட்டு உள்ளே செல்லுமாறு படையினர் அறிவுறுத்தி உள்ளனர். எனினும் தான் ஒரு மாகாண சபை உறுப்பினரெனவும் தனது கைத் தொலை பேசியையாவது கொண்டு செல்ல அனுமதிக்குமாறும் அனந்தி கோரியுள்ளார்.

இதனையடுத்து எழுந்த முரண்பாட்டை அடுத்து அவரை உள்ளே செல்ல படையினர் அனுமதியிருக்கவில்லை. இதனிடையே அவர் பயணித்த முச்சக்கர வண்டியை படையினர் சுற்றிவளைத்துக் கொண்டதாகவும் எனினும் இராணுவப் பொலிஸார் தலையிட்டு அவரை வெளியேற அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.