செய்திகள்

பல்கலைக்கழக அங்கீகாரம் அற்ற கலாநிதிப்பட்டங்களை பயன்படுத்த கொழும்பு தமிழ்ச்சங்கம் தடை

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆட்சிக்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களினால் வழங்கப்பட்ட கலாநிதிப்பட்டம் தவிர்ந்த வேறு எந்தவொரு அமைப்பினாலும் வழங்கப்பட்டுள்ள கலாநிதிப்பட்டத்தை தமது சாசனங்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் கடிதத் தலைப்புகள் ஆகியவற்றில் உறுப்பினர்கள் பயன்படுத்த முடியாது என்று கொழும்பு தமிழ்ச் சங்கம் கடந்த வாரம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது.

வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ் சங்கத்தில் அதன் ஆட்சிக்குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றபோதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்ச் சங்கத்தின் எந்தவொரு கட்டத்தொகுதியிலும் அத்தகைய கலாநிதிப்பட்டத்துடன் தொடர்புடைய ஆவணங்களை காட்சிப்படுத்தக் கூடாது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவளை, சமூக சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட வேறு பண்பாட்டு நிறுவனங்களில் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை வகிப்பவர்கள் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய பதவிகளை ஏக காலத்தில் வகிக்க முடியாது என்றும் சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளிற்கு எவரையேனும் முன்மொழியும் போது அவர் குறைந்தபட்சம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில்தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கலாநிதிப்பட்டம் தொடர்புடைய தீர்மானம் தவிர , ஏனைய இரு தீர்மானங்களும் சங்கத்தின் பொதுச் சபையின் அங்கீகாரத்திற்காக பாரப்படுத்தப்படுத்தப்படவிருப்பதகவும் தெரியவருகிறது.

கலாநிதிப்பட்டம் தொடர்பான தீர்மானத்துக்கான முன்மொழிவை சங்க உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அ.நிக்ஸன் முன்மொழிந்தார். இதனை சட்டத்தரணி காண்டீபன் வழிமொழிந்தார். ஏனைய பிரேரணையையும் நிக்ஸன் முன்மொழிந்திருந்தார். இதனை கலாநிதி நவரட்ணம் வழி மொழிந்தார். இந்தப் பிரேரணை தொடர்பில் , சங்க உறுப்பினர்களுக்கிடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இருந்தபோதிலும், இந்தப் பிரேரணை உறுப்பினர்களினால் நிறைவேற்றப்பட்டது.