செய்திகள்

பல கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது: வடக்கு முதல்வர்

“வடக்கு, கிழக்கில் யுத்தத்திற்கு பின்னர் தீர்வு காணப்படவேண்டியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதற்கான எமது விருப்பj;ij தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் அரசாங்கத்துக்கு உறுதியளிப்பதுடன், ஐக்கிய இலங்கைக்குள் எமது சமூகத்தின் ஒன்றுபட்ட பாதுகாப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வன்முறையற்றதும் ஜனநாயக ரீதியானதும் சமத்துவமானதுமான அரசியல் தீர்வு குறித்த எமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகின்றோம்.”

இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி, ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜயசூரியவுடன் இடம்பெற்ற முதலமைச்சர்களின் விசேட சந்திப்பின் போதே விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்திருக்கிறார். கொழும்பிலுள்ள இலங்கை அபிவிருத்தி மற்றும் நிர்வாக நிர்வகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

அங்கு உரையாற்றிய வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“வடக்கு, கிழக்கிலிருந்த இராணுவ ஆளுநர்கள் அகற்றப்பட்டு அந்த இடத்துக்கு வெளிவிவகார மற்றும் சிவில் சேவைத்துறை சார்ந்த கௌரவமான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வடக்குக்கான பயணக் கட்டுப்பாடு அகற்றப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சரியான திசையில் செல்வதற்கான அடையாளமாக அமைகின்றது. அத்துடன் இராணுவத்தை இல்லாமற் செய்யும் விவகாரத்துக்கும் தீர்வைக் காண்பதற்கான எதிர்பார்ப்புக்கான அடையாளமாகவும் காணப்படுகின்றது.

தேசிய அரச பாதுகாப்பு என்ற அடக்குமுறையான நிலைப்பாட்டில் அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அந்த விடயம் மனிதப் பாதுகாப்பு மீது செலுத்தப்பட்டிருந்தது. இந்த மாதிரியான திருத்துவதற்கு வேண்டிய விடயம் நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்த விடயம் தொடர்பான மறுசீரமைப்புகள் பலதுறைகளில் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. உதாரணமாக சட்ட ஆட்சி இல்லாமல் மனிதப் பாதுகாப்பை வென்றெடுக்க முடியாது.

அரசியலமைப்புக்கு மாறாக நியமிக்கப்பட்டிருந்த வட மாகாண பிரதம செயலாளரை அகற்றுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விடயமும் சட்டப்படியான பிரதம நீதியரசரை மீள நியமிக்கவும் மற்றும் சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின்படியான பிரதம நீதியரசரை வெளியேற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்டமை துணிச்சலான தீர்மானமாகும். சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின்படியான பிரதம நீதியரசரின் நோக்கத்துடனான நியமனமானது எமது நீதித்துறை வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருந்தது. அதனை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் சட்ட ஆட்சியை மீள நிலைநாட்டுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

குற்றவியல் பிரேரணை ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் இடம்பெற்ற நீதித்துறை அதிகாரிகளின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றுமாறு நான் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் துணிச்சலான தலைவர் உபுல் ஜயசூரியாவின் பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்ற அச்சமயம் நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

அந்தக் காலம் முதல் இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் ஆற்றியிருந்த கண்ணபிரான் ஞாபகார்த்த சொற்பொழிவு வரை நீதித்துறைக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்திலை நான் முன்னிலைப்படுத்தியிருந்தேன். அத்துடன் சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின்படியான பிரதம நீதியரசரின் சட்டவிரோத நியமனம் பற்றியும் நான் விடயங்களை முன்னிறுத்தியிருந்தேன். ஆதலால் கடினமானதும் துணிச்சலானதும் சரியானதுமான தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் ஜனநாயக ஆட்சியையும் அமைச்சையும் கொண்டிருக்கும் அமைச்சர் ஜயசூரிய ஏனைய அரசாங்க உறுப்பினர்களை நான் பாராட்டுகின்றேன்.

நாங்கள் ரணங்களை ஆற்றுப்படுத்துவதற்கும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் நாடென்ற முறையில் முன்னேற்றத்தைக் காணவும் பல கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. அரசாங்கத்தின் இலக்கானது குறிப்பாக எதிர்வரும் பொதுத் தேர்தல்களின் அடிப்படையில் மிகவும் கடினமானதாக அமைந்திருக்கிறது. வட, கிழக்கு மாகாணங்களின் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு நெருக்கடிகள் குறித்து அறிந்திருக்கிறார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

நாட்டிலுள்ள ஏனையவர்களிலும் பார்க்க யுத்தத்தினால் தாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென வட மாகாணத்திலுள்ளவர்கள் விரும்புகின்றனர். எமது சனத்தொகையில் சுமார் 67 வீதமானோர் யுத்த விதவைகளாகும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் இப்போதும் இராணுவம் நிலைகொண்டுள்ளது. அத்துடன் வர்த்தக, விவசாய மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளிலும் இராணுவம் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறது. அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கைகளில் விலக்கப்பட்டிருக்கின்றனர்.

யுத்தத்துக்குப் பின்னரான சமூக, பொருளாதார அபிவிருத்தியும் இலங்கையின் புலம்பெயர்ந்தவர்களுடன் ஆக்கபூர்வமான செயற்பாடும் என்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2014 பெப்ரவரியில் கொழும்பில் நடத்திய தேசிய மாநாட்டில் நான் பின்வரும் விடயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். கொழும்பிலுள்ள நிர்வாகிகள் வடக்கானது இயல்பு நிலையுடன் இருக்கும் சமூகமல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமென்று கூறியிருந்தேன். அடுத்த மனித பேரவலம் எங்கு இடம்பெறப் போகின்றது என்பதை அறிந்து கொள்ளாமல் அன்றாடம் வானவூர்திகள் வேகமாகச் சென்று கொண்டிருப்பதை அனுபவித்த சமூகமாக இது இருக்கிறது. காயமடைந்தோர் மற்றும் இறந்தவர்களை விட்டு விட்டுச் செல்லும் பயணங்களை மேற்கொண்ட உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இச்சமூகம் இருக்கின்றது.

வேறுபட்ட சூழ்நிலைகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக செயற்கையானதும் ஆரோக்கியமற்றதுமான வாழ்வை அவர்கள் கொண்டிருந்தனர். தமது பாரம்பரியமான குடியிருப்புகளிலிருந்தும் அவர்கள் வேருடன் களையப்பட்டிருந்தனர். ஆதலால் வடக்கிற்கோ அல்லது கிழக்கிற்கோ சகலருக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான கொள்கையை நாங்கள் கொண்டிருக்க முடியாது.”