செய்திகள்

பழம்பெரும் இயக்குநர் கே விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார்

தெலுங்கு சினிமாவின் மூத்த கலைஞரும், பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.‘கலா தபஸ்வி’ என அழைக்கப்படும் பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத். இவர் 19.2.1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.

இவர் கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.அதன் பின்னர் இவர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார்.

50 திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குநராக அறியப்பட்டாலும், நடிப்பிலும் கவனம் செலுத்தினார். 2000களில் இருந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இயக்குநர் கே.விஸ்வநாத், தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படத் துறைக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே, சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே விஸ்வநாத் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இவரை நேரில் சந்தித்த நலம் விசாரித்துவந்த நிலையில் சில மணிநேரங்கள் முன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.