செய்திகள்

பழிவாங்கல்களே இடம்பெறுகிறது! அவசர ஆட்சி மாற்றம் தேவை: மஹிந்த அழைப்பு

பழி வாங்கல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு புதிய அரசு செயற்படுவதால் நாட்டில் அவசர ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என வலியுறுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. இதற்காக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

மகளிர் அமைப்பு பிரதிநிதிகளுடன் அபயராம விகாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“அச்சமும், பீதியும் நிலைகொண்டிருந்த யுகத்தை மாற்றியமைத்தோம். சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்காகத் தீவிரவாதிகளுக்கு எதிராகவே நாம் போர் தொடுத்தோம். தமிழர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தவில்லை. வடக்கு மக்களின் சுதந்திரத்தையும் கருத்திற்கொண்டே எமது செயற்பாடுகள் அமைந்தன.

குறிப்பாக, எமது அரசில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை எதிர்க்கட்சியினர் சரமாரியாக விமர்சிக்கின்றனர்; கப்பம் அடிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். கொழும்பு துறைமுக நகரத்திட்டம் பற்றியும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், மோசடி எதுவும் அத்திட்டத்தில் தற்போது இல்லை எனக் கூறுகின்றனர்.

அரசியல் பழிவாங்கல்களே இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது. வைராக்கியம், குரோதம், பொறாமை ஆகிய தீய எண்ணங்களுடனேயே அரசிலுள்ளவர்கள் செயற்படுகின்றனர். இவர்களிடம் மேற்படி குணங்கள் இருக்கக்கூடாது என்பதற்காகவே நான் போதி பூஜைகளை நடத்தி வருகின்றேன். வாழ்க்கைச்சுமை குறைந்துள்ளதா?

இல்லை. போட்களை மாற்றும் அபிவிருத்தியையே புதிய அரசு முன்னெடுக்கிறது. எனவே, மாற்றமொன்று அவசியம். விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்குத் தயாராகுங்கள்”  என்றார்.