செய்திகள்

பஷீரை வெளியேற அனுமதித்து அரசாங்கம் தனது அரசியலமைப்பை மீறிவிட்டது: தென் ஆபிரிக்க உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டு

தென் ஆபிரிக்காவில் இருந்து அங்கு விஜயம் செய்திருந்த சூடான் ஜனாதிபதி ஒமர் அல்- பஷீர் வெளியேற அனுமதிக்கக் கூடாது என்ற தனது இடைக்கால தீர்ப்பினையும் மீறி அவர் சூடானுக்கு செல்வதற்கு அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் நாட்டின் அரசியலமைப்பை மீறி விட்டது என்றும் இது தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தென் ஆபிரிக்க உயர் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

சூடானில் இனப்படுகொலை , போர்க்குற்றச்சாட்டு மற்றும் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்களை இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பஷீர் , தென் ஆபிரிக்காவின் ஜோகன்னர்ஸ் பேர்க் நகரில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தபோது, அவரை கைது செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் தென் ஆபிரிக்காவை கேட்டிருந்தது.

இவரை கைது செய்ய வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான தனது தீர்ப்பினை இன்று வழங்குவதாகவும் அதுவரை பஷீர் நாட்டை விட்டு வெளியேற தென் ஆபிரிக்க அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியிருந்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியபோது, முன்னதாகவே அதிகாரிகளின் பாதுகாப்புடன் தென் ஆபிரிக்காவின் விமானப்படை முகாம் ஒன்றில் இருந்து வெளியேறிய பஷீர் தனது நாட்டை நோக்கி பாதி வழி போய்விட்டிருந்தார்.

காலை 10 மணிக்கு தென் ஆபிரிக்காவில் இருந்து புறப்பட்ட அவர் சூடானின் அந் நட்டு நேரப்படி மாலை 6.30 மணிக்கு தலைநகர் கார்டும் விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Bashir

முன்னைய செய்தி (இரண்டாம் இணைப்பு) 

நீதிமன்ற தீர்ப்பை உதாசீனம் செய்து தென் ஆபிரிக்காவில் இருந்து வெளியேறினார் சூடான் ஜனாதிபதி பஷீர்

தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்த சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷிரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று தென் ஆபிரிக்க உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வரை இடைகால தடை விதித்திருந்தபோதிலும், அந்த தீர்ப்பினை உதாசீனம் செய்து அவர் தென் ஆபிரிக்காவின் விமானப்படை முகாம் ஒன்றில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு சூடானுக்கு பயனமானார்.

பஷீர் சூடான் நோக்கி பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் மாலை 6. 30 மணிக்கு சூடானின் கார்டும் விமான நிலையத்தை அவர் வந்தடைவார் என்றும் அங்கு அவர் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்துவார் என்றும் சூடான் அமைச்சர் யஸீர் யூசுவ் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

பஷீரை கைது செய்யுமாறு தென் ஆபிரிக்க நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் இந்த விடயத்தை கையாளுவதில் ஏற்படக்கூடிய சிக்கலான நிலைமைகளை விட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி பஷீர் பயணாமாகியுள்ளமையை கையாளுவது பரவாயில்லை என்று தென் ஆபிரிக்கா கருதுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தென் அபிரிக்க அரசின் அனுமதியுடனேயே அவர் அந்த நாட்டின் விமானப்படை முகாமில் இருந்து நீதிமன்ற தீர்ப்பினை உதாசீனம் செய்யும் வகையில் வெளியேறி இருக்கிறார். இது குறித்து தென் ஆபிரிக்கா இதுவரை
எந்த கருத்தினையும் வெள்ளியிடவில்லை.

முன்னைய செய்தி (முதலாம் இணைப்பு )

தென் ஆபிரிக்காவின் ஜோஹன்னர்ஸ் பேர்க் நகரில் நடைபெறும் ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் கலந்து கொள்ள தென்னாபிரிக்கா க் சென்றுள்ள சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷிரை கைது செய்யுமாறு தென் ஆபிரிக்க அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கேட்டுள்ளதை அடுத்து அவர் தென் ஆபிரிக்காவை விட்டு வெளியேறக் கூடாது என்று தென் ஆபிரிக்க உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வரை இடைகால தடை விதித்துள்ளது.

ஒமர் அல்-பஷீர் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமா இல்லையா என்று இன்று தீர்ப்புக் கூறும் வரை அவர் தென் ஆபிரிக்காவை விட்டு வெளியேறக்கூடாது என்று பிரிட்டோரியாவில் உள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் கலந்து கொள்ளும் சகல நாடுகளின் தலைவர்களுக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குவது என்ற தென் அபிரிக்க அரசின் முடிவை மற்றக் கோரி தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று உயர் நீதி மன்றத்தில் செய்துள்ள அவசர மனு மீதான தனது தீர்ப்பு இன்று அளிக்கப்படும் வரையிலேயே பஷீர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் உத்தரவை உயர் நீதி மன்றம் வழங்கியுள்ளது.

சூடானில் 2003 ஆம் ஆண்டு ஆரம்பமான டாபூர் நெருக்கடியின் போது போர்க்குற்றச்சாட்டு , இனப்படுகொலை மற்றும் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக பஷீர் மீது சர்வதேச நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நெருக்கடியின்போது சுமார் 400,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். பல மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த யுத்தத்தின்போது கறுப்பின ஆபிரிக்கர்களை பஷீரின் படைகள் வேண்டும் என்றே கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பஷீரை கைதுசெய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் தென் ஆபிரிக்க அரசை கோரியிருப்பது அந்த நாட்டுக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்து பஷீர் தனது நாட்டுக்கு செல்வதற்கு தென் ஆபிரிக்கா அனுமதிக்குமானால், அது சர்வதேச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை மற்றும் மேலாண்மை ஆகியவற்றை மோசமாக பாதிப்பதற்கு வழிவகுத்ததாக சர்வதேச ரீதியில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகும். மறுபுறம், அவரை கைது செய்தால், தனது பிராந்தியத்தின் சக உறுப்பு நாட்டை சர்வதேச நீதிமன்றத்தின் வலையில் சிக்க வைத்து துரோகம் செய்ததாக ஆபிரிக்க நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகும்.

அங்கிருந்து வரும் தகவல்களின் படி, தென் ஆபிரிக்க அரசு பஷீரை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரியவருகிறது. சர்வதேச நீதிமன்றத்துக்கு எதிராக அரசாங்கத்தை அமைத்துள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இதனை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சர்வதேச நீதிமன்றம் அது உருவாக்கப்பட்டதற்கான பணியை செய்யவில்லை என்றும் ஐ. நா உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் நேர்மையும் நடுநிலையானதுமான ஒரு நீதிமன்றமாக இருக்கும் வகையில் அது மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அத்துடன், சர்வதேச மரபுகளுக்கு அமைய மாநாட்டில் கலந்து கொள்ளும் சகல தலைவர்களுக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.