செய்திகள்

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் வீடுகள் தேவாலயம் எரிப்பு

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் தேவாலயத்தை நேற்று தீயிட்டு எரித்த சம்பவத்தில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியான சாண்டா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஹுமாயூன் பைசல் மாசியா. கிறிஸ்தவரான இவர் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மத அவமதிப்பு சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்து ரலிரோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதை அறிந்த ஒரு கும்பல் போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். குற்றவாளி ஹுமாயூன் பைசல் மாசியாவை தங்களிடம் ஒப்படைக்கும் படி அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு மறுத்த போலீசார் அக்கும்பலை விரட்டியடித்தனர். உடனே அந்த கும்பல் சாண்டா பகுதியில் உள்ள ஹுமாயூன் வீட்டுக்கு வந்தனர்.

pakistan-church-attack

அவரது வீட்டை இடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் அப்பகுதியில் இருந்த ஏராளமான கிறிஸ்தவர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டன. கிறிஸ்தவர்களும் தாக்கப்பட்டனர். பல வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அப்பகுதியில் தேவாலயத்துக்கு தீ வைத்தனர். பொருட்கள் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் உயிருக்கு பயந்த கிறிஸ்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் மதகுரு உள்பட 40 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி இஜாஸ் ஷபி தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற பகுதியில் அமைதியை நிலைநாட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரி ஷுஜா கன்ஸாடா கூறியுள்ளார்.