செய்திகள்

பாகிஸ்தானில் ராஜதந்திரிகளுடன் சென்ற ஹெலிகொப்டரை தாமே சுட்டு வீழ்த்தியதாக தலிபான் உரிமை கோரியது

பாகிஸ்தானில் கடந்த வெள்ளியன்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் பயணம் செய்த இராணுவ ஹெலிகொப்டரை தாமே சுட்டு வீழ்த்தியதாக தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

இந்த விபத்தின்போது நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பாகிஸ்தானுக்கான தூதுவர்களும், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தூதுவர்களின் மனைவிமார்களும் மற்றும் மூன்று விமான சிப்பந்திகளும் பலியாகியிருந்தனர்.

தரையில் இருந்து ஆகாயத்துக்கு ஏவும் ஏவுகணை ஒன்றுடன் நிற்கும் தலிபான் வீரர்களுடன் தலிபான் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் இந்த தாக்குதலுக்கான உரிமை கோரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ளதை ஒத்த ஒரு ஏவுகணையையே தாம் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாகவும் சுமார் 3 கிலோமீற்றர்கள் தூரத்தில் இருந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த செய்தி குறித்த நம்பகத்தன்மை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

வட பாகிஸ்தானிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றது. இயந்திரகோளாறு காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பாகிஸ்தான் இராணுவம் முன்னர் கூறியிருந்தது.