செய்திகள்

பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் – இலங்கையர் கொடூரமான முறையில் எரித்து கொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில்…. சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன். இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணைகள் தம்மால் நேரடியாக அவதானிக்கப்படுவதாகவும் விசாரணைகள் எந்த வகையிலும் தவறான செயற்பாட்டினை கொண்டிருக்காது எனவும் இம்ரான் கான் ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.இதேவேளை, விசாரணை மற்றும் நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை தேவை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.அதேவேளையில் சர்வதேச மன்னிப்புச் சபை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையை வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம், சம்பவம் தொடர்பாக இதுவரையில் 100 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய 10 குழுக்களை பொலிஸார் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.(15)