செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் முஸ்லிம் தலைவர்களுக்கு மறுப்பு

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ரவூப்ஹக்கீம் ரிசாத் பதியுதீன் உடனான பாக்கிஸ்தான் பிரதமரின் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு காரணங்களிற்காகவே இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான முடிவுகளை இருநாடுகளையும் சேர்ந்த அரசியல்குழுவொன்றே எடுக்கின்றது அரசாங்கத்திற்கு இதில் தொடர்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புகளை நடத்தவுள்ளார்.(15)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் ஆகியோருடனான சந்திப்புக்கும் சிறிது நேரம் ஒதுக்கீடு செய்யப்ட்டிருந்தது.எனினும் இறுதி நேரத்தில் இந்த சந்திப்புக்களுக்கான சந்தர்ப்பம் இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.